Friday, September 01, 2006
பற்றினேன் உன்னடி..
பித்துப் பிடித்ததய்யா எனக்கோர்
பித்துப் பிடித்ததய்யா!
பித்துப் பிடித்ததய்யா எனக்கோர்
பித்துப் பிடித்ததய்யா
முத்தய்யா முருகய்யா கந்தய்யா வேலய்யா
பக்தியால் நானுன்னைப் பாடினேன் கேளய்யா!
சித்தம் தெளிவுற தீமைகள் மாய்ந்திட
பற்றறுத்தே எந்தன் பாவங்கள் நீங்கிட
உற்ற துணையாக உன்னைநான் கண்டபின்
பெற்றிடும் பேறது வேறெது சொல்லய்யா!
நித்திரை நீங்கினேன் புத்துயிர் தாங்கினேன்
நித்தமும் உன்னருள் பெற்றிட ஏங்கினேன்
பற்றினேன் உன்னடி பாசங்கள் நீங்கினேன்
முற்றிலும் நீயென மூச்சினை வாங்கினேன்!
கற்றவை பெற்றவை உற்றவை யாவிலும்
பட்டவை போதுமென் றெட்டியே ஓடினேன்
விட்டவை பொய்யென வேலனே மெய்யென
பற்றுவைத் தேயுனைப் பார்க்கிறேன் ஐயனே!
மாடிமனை பொருள் கோடி சுகங்களும்
வேடம்என் றாகிடும் வேளையும் வந்திடும்
ஆடிமுடிக் குமுன் ஞானக் கொழுந்தினைப்
பாடிப் பணிந்திடும் பாக்கியம் தந்தனை!
இந்துமகேஷ்
25.03.2004
Tuesday, August 22, 2006
ஆண்டருள் செய்யப்பா!
அப்பா முருகப்பா எனை
ஆண்டருள் செய்யப்பா
தப்பா தருள்செய்தால் நான்
தாங்குவேன் உயிரப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
முப்போதும் முருகா என்பேன்
முன்வினை தீரப்பா
எப்போதும் உன்னுட னிருக்க
இன்னருள் செய்யப்பா!
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
பொற்பாதம் போற்றிய பின்னால்
பொய்மைகள் ஏதப்பா
இப்பாரில் எல்லா மாகி
இருப்பவன் நீயப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
கற்போலும் மனங்களைக் கூட
கரைத்திடும் மெய்யப்பா
சொற்பூவால் மாலைகள் தொடுத்தேன்
துணைக்கரம் நீட்டப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
இப்போது எனைப் பிரிந்தால் உனைக்
காண்பது எப்பப்பா
சுப்பா உன் திருமுகம் கண்டால்
சுகம்பெறும் உலகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
அப்பா முருகப்பா
இந்துமகேஷ்
14.05.2004
Sunday, August 20, 2006
இணையடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
அருள்முகம் காட்டி என்னை
ஆண்டருளும் வேலவா! - என்
இருவினை நீக்கி உந்தன்
இணையடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
பொருள் புகழ் போதை என்று
போயலைந்தேன் வேலவா!- என்
பொய்மைகளை நீக்கி உந்தன்
பொன்னடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
ஆதி எது அந்தம் எது
அறிந்ததில்லை வேலவா! -என்
அகத்திருளை நீக்கி உந்தன்
அருளடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
நாதியின்றிக் கால மெல்லாம்
நானலைந்தேன் வேலவா! - என்
நலிந்தமனம் மாற்றி உந்தன்
நல்லடியில் சேர்க்கவா!
முத்துக் குமரா! முத்துக் குமரா!
முத்துக் குமரா சிவ சக்திக்குமரா!
சக்திக் குமரா! முத்துக் குமரா!
இந்துமகேஷ்
09.05.2004
Wednesday, August 16, 2006
எந்தனுக்கோர் ஞானப்பழம் என்று...
அன்னை உமை பாலகனே! ஆறுமுக வேலவனே
உன்னை எண்ணித் துதித்திருந்தேன்
ஓடிவந்து அணைப்பதெப்போ?
( இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே!- திருப்புகழ்)
பாடிவைத்தான் அருணகிரி பக்தியோடு திருப்புகழை
நாடிவந்து அருள்கொடுத்தாய்! நானழைத்தால் வாராயோ?
தேடியுன்னைச் சரணடைந்தால் தீமைகளை வேரறுப்பாய்
வாடிமனம் சோருமுன்னே வந்தருள மாட்டாயோ!
அண்ணனுக்குப் பழம்கொடுத்த அப்பனம்மை தனைப்பிரிந்து
வண்ணமயில் மீதமர்ந்து வந்து நின்றாய் பழனியிலே!
மண்ணுலகில் நான்பிறந்து வாழுகின்றேன் உனக்காக
எந்தனுக்கோர் ஞானப்பழம் என்று வந்து நீ தருவாய்!
ஆறுமுகம் ஓருருவாய் அப்பனே நான் உனையறிந்தேன்
வேறுதுணை ஏதுமில்லை வீழ்ந்து விட்டேன் உன்னடியில்
ஆறுபடை வீடமர்ந்து ஆட்சிசெய்யும் நாயகனே
தேறுதலை நீ தருவாய்! ஆறுதலை நான் தொழுவேன்!
- இந்துமகேஷ்
(15.03.2004 நள்ளிரவு)
Monday, July 31, 2006
சந்நிதியில் புரள்கின்றேன்
முருகா முருகா முருகா என்று
முப்பொழுதும் அழைக்கின்றேன்
வருவாய் முருகா அருள்வாய் என்று
வாழும் நாளைக் கழிக்கின்றேன்
திருமால் மருகா குமரா என்றுன்
சேவடியைத் துதிக்கின்றேன்
சிந்தைக் கினியோய் அருள்வாய் என்று
தினமும் வழியைப் பார்க்கின்றேன்
அருவாய் உருவாய் தெரிவாய் உனையே
அனுதினமும் நினைக்கின்றேன்
திருவாய் மலரும் சிரிப்பின் அழகில்
தினமும் என்னை மறக்கின்றேன்
கருவாய் உருவாய் ஆனேன் எனையே
காலடியில் தருகின்றேன்
குருவாய் வருவாய் அருள்வாய்என்று
குவலயத்தில் அலைகின்றேன்
சருகாய் புவியில் சரியும் முன்னே
சரவணனைப் பணிகின்றேன்
தருவாய் நலமே தவமே என்று
சந்நிதியில் புரள்கின்றேன்.
-இந்துமகேஷ்
(13.05.2004)
Friday, July 07, 2006
வரும் உந்தன் அன்பே மெய்யே!
திருப்புகழைப் பாடிப் பாடி
தினந்தோறும் உன்முகம் தேடி
உருகுகிறோம் ஒன்றாய்க் கூடி
ஓம் முருகா வருவாய் ஓடி!
வாழ்க்கை இது பொய்யே பொய்யே
வரும் உந்தன் அன்பே மெய்யே
காக்கும் சிவசக்தியின் சேயே
கந்தா நீ வந்தருள் வாயே!
ஆதாரம் நீஎன் றறிந்தோம்
அன்பாலே தினம் உனைப் பணிந்தோம்
தீதெல்லாம் மாய்ந்திடக் கண்டோம்
திருவடியே சரண் என விழுந்தோம்
பொருளோடு புகழும் வாழ்வும்
பொய்யென்று ஒருநாள் ஆகும்
அருள்தந்து எம்மைக் காக்கும்
அறுமுகமே நிலையென் றாகும்!
வருவதெல்லாம் உன்னால் தானே
வந்தருள்வாய் எழில்முரு கோனே
கருணையினால் வினையறுப் போனே
காத்திடுவாய் எங்களைத் தானே!
-இந்துமகேஷ்
(15.11.2004)
வேழமுகத்தான் வந்து காத்தான்.
ஐந்துகரம் கொண்டதொரு பிள்ளைமுகம் கண்டபின்பு
ஆசைகளை விட்டதடா நெஞ்சம் .இனி
அவனடியில் என்னுயிரே தஞ்சம்
விந்திலொரு கருவாகி வேடமிட்டு வந்த எனை
வேழமுகத்தான் வந்து காத்தான் -மன
வேதனைகள் யாவையுமே நீத்தான்
நொந்துமனம் வேகாமல் நுண்ணறிவு சாகாமல்
நோயகல மருந்தாக வந்தான் - ஒரு
யோகநிலை தானாகி நின்றான்
வெந்தழிந்து போகுமுடல் மீளாது எந்தனுயிர்
மீளவொரு வழியதனைக் கண்டேன் - அருள்
வேழமுகத்தைப் பற்றிக் கொண்டேன்.
-இந்துமகேஷ்.
(16.11.2004)
Tuesday, May 30, 2006
அரகர முருகா! எனை யாளும் சண்முகா!
அரகர முருகா
எனை யாளும் சண்முகா!
அரகர சிவ சிவ சண்முக நாதா
ஆண்டருள் செய்திட அருகினில் வாவா!
இருவினை களைந்திடும் என்குரு நாதா
ஈடிலா நின்பதம் பெற அருள் தாதா!
அரகர முருகா
எனை யாளும் சண்முகா!
உலகினைக் காத்திடும் உயர்கும ரேசா
ஊழியம் புரிந்திடும் அடியவர் நேசா!
எளியவர்க் கிரங்கிடும் என்குரு நாதா
ஏழையென் பால் உந்தன் மனமிளகாதா?
அரகர முருகா
எனை யாளும் சண்முகா!
ஐங்கரன் தம்பியே அருள்வடி வேலா!
ஐயமில் லாதொரு வாழ்வினைத் தாதா!
ஒருமுக மாகிய அறுமுக வேலா
ஓய்ந்திடு முன்எனைக் காத்திட வாவா!
அரகர முருகா
எனை யாளும் சண்முகா!
ஒளவைக்கு ஞானத்தை வழங்கிய பாலா
அருள்விழி காட்டிஎன் துயரகற் றாயா!
அரகர சிவசிவ சண்முக நாதா!
ஆண்டருள் செய்திட அருகினில் வாவா!
அரகர முருகா
எனை யாளும் சண்முகா!
-இந்துமகேஷ் 2004
(பிறேமனில் கோயில்கொண்ட அருள்மிகு சிவசக்திக்குமரனை நினைந்து எழுதிய பஜனைப் பாடல்)
Wednesday, May 17, 2006
வருவாய்! துணைபுரிவாய்!
முருகா! மால் மருகா!
வருவாய் துணைபுரிவாய்!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
காடலைந்து வள்ளிதன்னைக்
கரம்பிடித்த வேலவா!
நாடலைந்தும் உன்னில் நாங்கள்
கொண்டகாதல் காணவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
ஓமுரைத்த பொருள் வகுத்து
தந்தைமனம் ஈர்த்தவா!
நாம்அழைக்கும் நிலையறிந்து
நன்மைகளைச் சேர்க்கவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
நீபடைத்த மண்ணில் என்றும்
நிறைந்திருக்கும் வேலவா!
போர்முடித்து சுதந்திரத்தைப்
போற்றுகின்ற வாழ்வு தா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
ஆறுபடை வீடமைத்து
அருள்புரியும் வேலவா
தேறுதலைத் தேடும் எங்கள்
தீவினைகள் போக்கவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
(இந்துமகேஷ் - 1992 ஆடி)
வருவாய் துணைபுரிவாய்!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
காடலைந்து வள்ளிதன்னைக்
கரம்பிடித்த வேலவா!
நாடலைந்தும் உன்னில் நாங்கள்
கொண்டகாதல் காணவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
ஓமுரைத்த பொருள் வகுத்து
தந்தைமனம் ஈர்த்தவா!
நாம்அழைக்கும் நிலையறிந்து
நன்மைகளைச் சேர்க்கவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
நீபடைத்த மண்ணில் என்றும்
நிறைந்திருக்கும் வேலவா!
போர்முடித்து சுதந்திரத்தைப்
போற்றுகின்ற வாழ்வு தா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
ஆறுபடை வீடமைத்து
அருள்புரியும் வேலவா
தேறுதலைத் தேடும் எங்கள்
தீவினைகள் போக்கவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
(இந்துமகேஷ் - 1992 ஆடி)
Monday, May 08, 2006
கந்தனை நினைந்து...
காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
ஞாலம் படைத்துக் காப்பவனே
நல்லோர்க் கருளும் நல்லூரானே!
சந்ததம் உன்னைச்
சிந்தையில் வைத்தால்
தருவாய் சுகமே
சந்நிதியானே -செல்வச்
சந்நிதியானே
வந்தமர் குன்றம்
வளமிகு சோலை
வாழ்திருத் தணிகை
நின்றிடுவோனே - இன்பம்
தந்திடுவோனே
காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
கல்மனம் கொண்ட
புல்லரும் உந்தன்
கழலே தொழுதே
கனிந்திடுவாரே - துன்பம்
களைந்திடுவாரே
எல்லையே இல்லா
அன்பினால் என்றும்
இன்னருள் புரியும்
மால்மருகோனே - திரு
மால்மருகோனே
காலமெல்லாம் உந்தன் புகழ்பாட
கருணை புரிவாய் கதிர்காமா!
(இந்துமகேஷ் -1992கார்த்திகை)
Subscribe to:
Posts (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
அன்னை உமை பாலகனே! ஆறுமுக வேலவனே உன்னை எண்ணித் துதித்திருந்தேன் ஓடிவந்து அணைப்பதெப்போ? ( இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் த...
-
அகரமுதல எழுத்தெல்லாம் ஆன தெய்வமே ஆறுமுக வேலவனாய் அமர்ந்த தெய்வமே! அம்மையப்பன் மகனான அழகுத் தெய்வமே ஆறுமுகம் கொண்டெமக்கு அருளும் தெய்வமே இம்...
-
உருகி உருகி கண்ணீர் பெருகிப் பெருகி உந்தன் அருளைத் தேடுகிறேன் முருகா!- நீ அருகில் அருகில் என்று வருவாய்? அருகில் அருகில் என்று வருவாய்? அருக...