Monday, December 08, 2008

எங்கள்நிலம் காத்தருளவா!




















ஏற்றிய தீபங்கள் தீபங்கள் அல்ல
எங்கள் மனமல்லவா! - அதில்
தெரிகின்ற ஒளி உந்தன் முகமல்லவா!
துன்ப - இருள் நீக்கவா-
சூழும் இடர் போக்கவா- எங்கள்
மனமாளும் வடிவேலவா!











கார்த்திகை தீபங்கள் ஏற்றிவைத்தோம்!
கந்தா உன் பொன்னடி போற்றிநின்றோம்!
காத்தருள்வாய் என்று வேண்டுகின்றோம்
கண்ணீரில் மாலைகள் சூட்டுகின்றோம்!

வேழமுகம் கொண்ட நாதன் தம்பியல்லவா
ஈழமதன் துயர்நீக்கி எம்மைக் காக்கவா!
நாளும் உந்தன் புகழ்பாடி நாங்கள் தொழுதோம்
நாயகனே நீ எழுந்து அருள் செய்யவா!

உன்னையன்றி தஞ்சமினி வேறிடமில்லை
உருகுகிறோம் எங்கள் முகம் பார்த்தருளவா!
மண்ணுலகை வாழவைக்கும் தெய்வமல்லவா
வடிவழகா எங்கள் நிலம் காத்தருள வா!


-இந்துமகேஷ்
(கார்த்திகை 2004)

Monday, November 24, 2008

எழுந்தெம்மைக் காத்திட வா!














வேல்முருகா வேல்வேல் வேல்முருகா!
வேல்முருகா வேல்வேல் வேல்முருகா
வேல்முருகா வேல்வேல் வேல்முருகா!

கதிர்காம மலைஏறி காவடிகள் ஏந்திவந்து
காலடியில் காத்திருந்தோம் அய்யா முருகய்யா
கண்குளிரக் கண்டுமனம் களிக்கின்ற வேளையிலே
காலம்நம்மை விரட்டியதேன் அய்யா முருகய்யா!

கற்பூரச் சட்டியிலே உள்ளங்களை உருகவிட்டுக்
கருணைக்காகக் காத்திருந்தோம் அய்யா முருகய்யா
அற்புதங்கள் செய்யும்உந்தன் அருளைநாங்கள் பருகுமுன்னம்
அகதிகளாய் மாறியதேன் அய்யா முருகய்யா!

நல்லூரின் வீதியெல்லாம் நடைநடையாய் நடந்துநாங்கள்
நல்லருளை வேண்டிநின்றோம் அய்யா முருகய்யா
எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் எங்கள் குலதெய்வமே நீ
ஏனருளைத் தரமறந்தாய் அய்யா முருகய்யா!

பொல்லாத பகையோடு துயர்வந்து புகுந்தாலும்
பொன்னடியை நீங்கமாட்டோம் அய்யா முருகய்யா
இல்லாத இடமில்லை எங்கும் நிறைந்தவன் நீ
எழுந்தெம்மைக் காத்திடவா அய்யா முருகய்யா!



-இந்துமகேஷ்
27.06.2004

Wednesday, September 24, 2008

திருவூஞ்சல் ஆடீரோ!

காப்பு.



அருள்பொங்கும் சிவசக்திக் குமரன்தன் பதம்பாடி
மருள்நீங்கி வாழ்வுதனில் மாண்புறவே - பொருள்கொண்டு
புனையும் திருவூஞ்சல் பொலிவுறத்தான் துணைவருவாய்
வினைகள் கடியும் சித்திவி நாயகனே.












1.
அந்தமும் ஆதியிலா ஆனந்தத் தாண்டவனின்
மைந்தனே! ஈசனுக்கும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கும் குருவானாய் சிவசக்திக் குமரையா!
வந்தமர்ந்த ஜெர்மனியின் வளமான பிறேமனிலும்
உந்தனருட் பார்வைக்காய் உளமுருகும் எங்களது
சிந்தையிலே நீயிருந்து திருவூஞ்சல் ஆடீரோ!




2.
தெங்கு பனைசூழ் ஈழத் திருநாட்டின் குருபரனே
எங்கள் தவப்பயனாய் பிறேமனிலும் வந்தமர்ந்தாய்
பொங்கும் மகிழ்வோடு பொன்னுாஞ்சல் கட்டிவைத்தோம்
எங்கும் அருள்விளஙக எழுந்தருளும் எமதிறைவா
ஐங்கரனுக் கிளையோனே ஆறுமுக வேலவனே
இங்கும்உன் னடியவர்க்காய் திருவூஞ்சல் ஆடீரோ!





3.
அண்ணன் விநாயகனும் அன்னை மனோன்மணியும்
உன்னருகே வீற்றிருக்க ஒளிசிந்தும் சண்முகனே
புண்ணியனே சிவக்திக் குமரனே நின்மலர்த்தாள்
எண்ணித் துதிக்கும் எங்கள் இன்னல்களைத் தீர்ப்பவனே!
வண்ணமயில் வாகனனே வடிவழகா உன்னருளை
திண்ணமதாய் நாம்பெறவே திருவூஞ்சல் ஆடீரோ!




4.
வானோர் துயர்களைய வடிவேல் எடுத்த தேவ
சேனாபதியே! சிவக்கொழுந்தே நம்தமிழர்
ஊனாய் உயிராய் உணர்வாய்க கலந்தவனே
ஆனாய் எம் உறவென்றே அகிலமெல்லாம் காத்திடவே
தானாக வந்துதித்து தன்கருணை தந்தருளும்
கோனே மனமகிழந்து திருவூஞ்சல் ஆடீரோ!




5.
ஆறுபடை வீடமைத்தோம் அழகழகாய்த் தமிழகத்தில்
கூறுபட்ட தமிழர்களோ குடிபுகுந்த ஜெர்மனிலும்
தேறுதலைத் தேடி உந்தன் திருவடியைச் சரண்புகுந்தோம்
வேறுதுணை ஏதுமில்லை வேலவனே நின்புகழைக்
கூறுமடியார்களொடு கூடிமனம் களிப்புறவே
ஆறுமுகா அருளமுதே திருவூஞ்சல் ஆடீரோ!




6.
பாரோடும் விண்ணோடும் பரந்தருளைத் தான் பொழியும்
சீராளா எங்கள் சிவசக்திக் குமரேசா!
போராடும் நம் தமிழர் புதுவாழ்வு தான் பெறவே
சீரோடு வந்தெங்கள் சிந்தைதனில் குடிகொண்டாய்
ஆராவமுதே அருட்கடலே அற்பதமே
வாரீர் நின் புகழ்பாடதிருவூஞ்சல் ஆடீரோ!


7.
நல்லூரும் சந்நிதியும் கதிர்காமத் திருத்தலமும்
பல்லோரும் போற்றும் ஈழப் பதியாகக் குடிகொண்ட
வல்லோனே எங்கள் வடிவேலே தொல்லைகளை
இல்லாது ஒழிப்போனே எழில்சக்திக் குமரேசா
சொல்லாலே நாம்தொடுத்த தமிழ்மாலை தானணிந்து
நல்லோனே நாம் காண திருவூஞ்சல் ஆடீரோ!




8
குன்றேறி நின்றெங்கள் குறைதீர்க்கும் குமரகுரு
மன்றாடி நாமழைக்க மயிலேறி வந்திடுவான்
அன்றாடம் நம்வாழ்வில் அவன் நாமம் அல்லாமல்
நின்றாடும் பயம்வெல்ல நிலையேது புவிவாழ்வில்
ஒன்றோடு ஒன்றாக உயிராகி நின்றோனே
இன்றெங்கள் விழிகாண திருவூஞ்சல் ஆடீரோ




9.
வானகத்து தேவயானை மனமகிழும் மணவாளா
கானகத்து வள்ளியினைக் கரம்பிடித்த குமரேசா
ஊனகற்றும் உயிர்க்காதல் உன் கருணைக் காதலெனும்
ஞானமற்றுப் போனவர்க்கும் நல்லறிவைத் தருபவனே
நானகன்று நீியிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
தேனையொத்த தமிழ்க்குமரா திருவூஞ்சல் ஆடீரோ!




10.
முத்துநகை தெய்வானை கொத்துமலர் குறவள்ளி
கைத்தலத்தில் வடிவேல் உன் காலடியில் வண்ணமயில்
இத்தனையும் உன்னழகை எடுத்தியம்பும் -வீரமெனில்
பித்தமிகு சித்தமதால் பிளவுகண்ட சூரனவன்
செத்தபின்னும் சாகாமல் சேவற்கொடி யாகிநின்றான்
அத்தனையும் அருகிருக்க திருவூஞ்சல் ஆடீரோ!




- இந்துமகேஷ்.


(ஜெர்மனி-பிறேமன் நகர் சிறீ சிவசக்திக்குமரன் ஆலயத்தில் 02.08.2002 அன்று நடைபெற்ற சங்காபிஷேகத்தின்போது பாடப்பெற்றது)

Friday, May 30, 2008

தவமே புரிந்தேன்!











ஒருநாள் இருநாள்
உளதா வாழ்வு?
உனதாய் உயிராய்
நிறைந்த தென் வாழ்வு!

கருவாய் மிதந்தேன்
உருவாய் தவழ்ந்தேன்
கழலே நினைந்து
தவமே புரிந்தேன்!

அழகா! குமரா!
முருகா! எனநான்
அழைத்தேன்! அணைத்தாய்!
அகம்நான் மகிழ்ந்தேன்!

உலகே பெரிதாய்
உறவே நிலையாய்
உணர்ந்தேன் உனைநான்
பிரிந்தேன்! அலைந்தேன்!

அலைமேல் துரும்பாய்
அறியா மாயைக்
கடலில் விழுந்தேன்!
எனைநான் தொலைத்தேன்!

வருவாய் முருகா!
அருள்வாய் என நான்
தவித்தேன்! அணைத்தாய்
விழிநீர் துடைத்தாய்!

உனையே நினைந்தே
உருகும் சுகமே
நிலையாய் அடைந்தேன்!
நினையே தொடர்ந்தேன்!

உயிரின் உயிரே!
உறவின் பொருளே!
அருளின் மகனே!
நீயென் துணையே!

புகழும் பொருளும்
புவியின் சுகமும்
நிலையா தறிந்தேன்!
நினையே தொடர்ந்தேன்!

இகம்நீ! பரம்நீ!
எனதா ருயிர்நீ!
எழுவாய்! உலகின்
துயர்நீ களைவாய்!

அழகா! குமரா!
முருகா! அருள்வாய்!
அழகா! குமரா!
முருகா! அருள்வாய்!
அழகா! குமரா!
முருகா! அருள்வாய்!




-இந்துமகேஷ்
(25.05.08)

Friday, January 18, 2008

எப்பொழுதும் துணையிருக்கும் சுப்ரமண்யம்












சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்

அப்பனுக்குக் குருவான சுப்ரமண்யம்
- பாலசுப்ரமண்யம் -என்
அகத்திருளைப் போக்கவந்த சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
எப்பொழுதும் துணையிருக்கும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
இன்னல்களை நீக்கவந்த சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்


பக்திநெறி அறிவித்த சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
பாவந்தனை வேரறுக்கும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
சித்திதனை அள்ளித்தரும் சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம் -என்
சிந்தையிலே ஒளியாகும் சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்.


நல்லவர்க்கு நலம் அருளும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
ஞானகுரு என ஒளிரும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
தொல்லைகளைக் களைகின்ற சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
தூயமனக் கோயில் கொண்ட சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்



-இந்துமகேஷ்
(30.04.2004)










Sunday, January 13, 2008

கண்டாயா மனமே கண்டாயா









கண்டாயா கண்டாயா கண்டாயா
கந்தய்யனைக் கண்டாயா கண்குளிரக் கண்டாயா
கண்டாயா கண்டாயா கண்டாயா


ஆடும்மயில் ஏறிவரும் அப்பய்யனைக் கண்டாயா
சூழும்வினை தீர்க்கவரும் சுப்பய்யனைக் கண்டாயா
வள்ளிமனம் கொள்ளைகொண்ட வேலய்யனைக் கண்டாயா
வாழ்வுதர வந்தசிவ பாலய்யனைக் கண்டாயா


நீலகண்டன் தந்தநெற்றிக் கண்ணய்யனைக் கண்டாயா
நெஞ்சமெல்லாம் கோயில்கொண்ட சின்னய்யனைக் கண்டாயா
துள்ளிவரும் பகைமுடித்த வீரய்யனைக் கண்டாயா
சூரர்தமை வேரறுத்த குமரய்யனைக் கண்டாயா


ஆதிசக்தி மடிதவழ்ந்த அழகய்யனைக் கண்டாயா
ஆறுமுக சாமிஎங்கள் அருளய்யனைக் கண்டாயா
வித்தைகளைக் கற்றுத்தரும் முத்தய்யனைக் கண்டாயா
வேதத்துக்குப் பொருளுரைத்த சித்தய்யனைக் கண்டாயா


சூரியனைப் போல்ஒளிரும் பொன்னய்யனைக் கண்டாயா
துன்பஇருள் துடைக்கவந்த என்னய்யனைக் கண்டாயா
பிறேமனிலும் சிவசக்திக் குமரய்யனைக் கண்டாயா
பேரருளை அள்ளித்தரும் நல்லய்யனைக் கண்டாயா


கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா

-இந்துமகேஷ்
(12.03.2004)

Tuesday, January 08, 2008

ஓம்முருகா ஓம்முருகா என்றவனை நாடு!










தித்திக்கும் தமிழ்கொண்டு பாமாலை சூடி
திருவடியில் தலைவைத்து முருகா என்றாடி
பக்திக்குள் மூழ்குமனம் பல்லாண்டு பாடி
பணிந்தாலே திருக்குமரன் வருவானே ஓடி


இரவுபகல் பாராது எப்போதும் பாடு
இன்னருளைத் தருமுருகன் அருள்வடிவைத் தேடு
உறவெனவே அவன் வருவான் உள்ளன்பினோடு
ஓம்முருகா ஓம்முருகா என்றவனை நாடு


மாங்கனியில் ஞானமதை வைத்த முருகேசன்
வள்ளிமனங் கவர்ந்தருளும் அன்பர்களின் தாசன்
ஓங்கிவளர் சூரர்தமை ஒடுக்கியருள் ஈசன்
உள்ளன்பு கொண்டவர்க்குள் உறைகின்ற வாசன்


வீணான காலங்கள் போக்கியது போதும்
வேலவனின் திருவடியே சரணமென ஓதும்
குணமென்னும் குன்றேறி நின்றாலே நாளும்
குமரனவன் அருளொன்றே காத்தெம்மை ஆளும்


ஆறுபடை நூறுபடை ஆனதிந்தக் காலம்
ஆறுமுகன் நின்றருளக் காட்டும் திருக்கோலம்
நீறுபடை நெற்றியொடு கண்டுகளித் தாடும்
நெஞ்சுடையோர் தம்மாலே நிறைந்ததுவே ஞாலம்.


-இந்துமகேஷ்
(01.12.2004)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...