Thursday, September 03, 2009

அகரமுதல எழுத்தாகி...












அகரமுதல எழுத்தெல்லாம் ஆன தெய்வமே
ஆறுமுக வேலவனாய் அமர்ந்த தெய்வமே!



அம்மையப்பன் மகனான அழகுத் தெய்வமே
ஆறுமுகம் கொண்டெமக்கு அருளும் தெய்வமே

இம்மையிலும் மறுமையிலும் இணையும் தெய்வமே
ஈசனாரின் நெற்றிக் கண்ணில் எழுந்த தெய்வமே

உண்மைதனை உருவாகக் கொண்ட தெய்வமே
ஊருலகை வாழவைக்கும் உயர்ந்த தெய்வமே

எண்ணமெல்லாம் நீயானாய் இதயத் தெய்வமே
ஏறுமயில் ஏறிவரும் உதயத் தெய்வமே

ஐங்கரனின் சோதரனாம் அருமைத் தெய்வமே
ஐயமெல்லாம் நீக்கிஎமை ஆளும் தெய்வமே

ஒன்றாகிப் பலவாகி ஒளிரும் தெய்வமே
ஓங்காரத் தத்துவத்தை உணர்த்தும் தெய்வமே

ஒளவைமொழி கேட்டு மனம் மகிழும் தெய்வமே
ஒளடதமாய் வினையறுக்கும் அமுதத் தெய்வமே!



- இந்துமகேஷ்
(26.03.2004)

Sunday, August 16, 2009

உயிர்மெய் நீயே!












கலியுகதெய்வம் கந்தன் நீயே!
கார்த்திகைப் பெண்கள் மைந்தன் நீயே!
கிழக்கில் ஒளிரும் கதிரவன் நீயே!
கீதையின் நாயகன் மருகனும் நீயே!
குறமகள் மணமகன் குமரா நீயே!
கூறிடும் அடியவர் கோனும் நீயே!
கெட்டவைதம்மை அழிப்பவன் நீயே!
கேடிலாமனத்தில் வாழ்பவன் நீயே!
கைலையின் நாயகன்திருமகன் நீயே!
கொடுமைகள் தீய்த்துல காள்பவன் நீயே!
கோயில் கொண்டருள் புரிபவன் நீயே!
கெளரியின் மகனே காத்தருள்வாயே!


-இந்துமகேஷ்.

Wednesday, July 29, 2009

உனைப்பாடும் வரம்தா!










தமிழான குமரா!
உனைப் பாடும் வரம்தா!
சந்ததமும் சிந்தையிலே
நின்றெனை யாள் சண்முகனே!
தமிழான குமரா!
உனைப்பாடும் வரம்தா!

நிலையாத உலகென்று
அறியாது உடல்கொண்டு
நிலம்வந்து போராடினேன்- உன்னை
நினந்தேங்கி தினம் வாடினேன்!

விடையேதும் அறியாத
புதிரான வாழ்வுக்குள்
விதியென்று உயிர் வாடினேன்- உன்னை
விடையென்று மகிழ்ந்தாடினேன்

தமிழான குமரா!
உனைப் பாடும் வரம்தா!
சந்ததமும் சிந்தையிலே
நின்றெனை யாள் சண்முகனே!
தமிழான குமரா!
உனைப்பாடும் வரம்தா!

ஒளியாகி வழியாகி
உணர்வாகி உயிராகி
உலகாளும் உமை மைந்தனே! என்னை
உய்விக்கும் அருள் கந்தனே!

வளர்கின்ற துயரங்கள்
களைந்தெங்கள் வாழ்வுக்கு
வழிகாட்டும் முருகய்யனே! எமை
வாழ்விக்கும் அருள் அய்யனே!






தமிழான குமரா!
உனைப் பாடும் வரம்தா!
சந்ததமும் சிந்தையிலே
நின்றெனை யாள் சண்முகனே!
தமிழான குமரா!
உனைப்பாடும் வரம்தா!



-இந்துமகேஷ்
27.07.2009

Friday, June 12, 2009

மண்ணுலகைக் காப்பவன்தான் எங்கள் குருசாமி









குருவாகி வந்தருள்வாய்
குகனே சண்முகனே
குன்றம்வளர் பேரொளியே
தாள்பணிந்தோம் சரணம்!


தங்கவடிவேலன் அவன் எங்கள் குருசாமி
சங்கரியாள் பாலன் அவன் எங்கள் குருசாமி
சங்கடங்கள் தீர்த்தருள்வான் எங்கள் குருசாமி
சஞ்சலங்கள் நீக்கிடுவான் எங்கள் குருசாமி

அண்டிவந்தால் ஆதரிப்பான் எங்கள் குருசாமி
ஆண்டருள வந்திடுவான் எங்கள் குருசாமி
மண்டியிட்டால் வாழ்வளிப்பான் எங்கள் குருசாமி
மண்ணுலகைக் காப்பவன்தான் எங்கள் குருசாமி

ஓம்முருகா என்று சொன்னால் எங்கள் குருசாமி
ஓடிவந்து துணைபுரிவான் எங்கள் குருசாமி
யாமிருக்கப் பயம் எதற்கு என்பான் குருசாமி
நல்லவர்க்கு நலம் அருள்வான் எங்கள் குருசாமி


-இந்துமகேஷ்
2004.

Friday, June 05, 2009

திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்!











தேடித் தேடிக் காத்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
திருவடி காணத் தவம் கிடந்தேன்
சிவசக்திக் குமரய்யா!

பாடிப் பாடித் தோத்தரித்தேன்
சிவசக்திக் குமரய்யா! - உன்
பன்னிருவிழியைப் பார்த்திருந்தேன்
சிவசக்திக் குமரய்யா!

ஆடிப் பாடக் காலம் இல்லை
சிவசக்திக் குமரய்யா! - உன்
அருளைத் தந்தால் களித்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!

நாடிச் செல்லயாரும் இல்லை
சிவசக்திக் குமரய்யா!-உன்
நல்லடி பற்றி நலம்பெறுவேன்
சிவசக்திக் குமரய்யா!

கூடும் ஆசை ஏதும் இல்லை
சிவசக்திக் குமரய்யா! -உன்
குறுநகை கண்டால் மகிழ்ந்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!


சூடும் மலரில் ஒன்றாவேனோ
சிவசக்திக் குமரய்யா - உன்
சுந்தரத் தோளில் இளைப்பாறேனோ
சிவசக்திக் குமரய்யா!

வருவாய் வருவாய் என்றிருந்தேன்
சிவசக்திக் குமரய்யா! -உன்
வரவில் நானும் உயிர்த்திருப்பேன்
சிவசக்திக் குமரய்யா!

ஒருநாள் உனைநான் கண்டால்போதும்
சிவசக்திக் குமரய்யா!
திருநாள் அதிலே முழுதாய் வாழ்வேன்
சிவசக்திக் குமரய்யா!


-இந்துமகேஷ்
18.05.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...