Monday, July 31, 2006

சந்நிதியில் புரள்கின்றேன்










முருகா முருகா முருகா என்று
முப்பொழுதும் அழைக்கின்றேன்
வருவாய் முருகா அருள்வாய் என்று
வாழும் நாளைக் கழிக்கின்றேன்

திருமால் மருகா குமரா என்றுன்
சேவடியைத் துதிக்கின்றேன்
சிந்தைக் கினியோய் அருள்வாய் என்று
தினமும் வழியைப் பார்க்கின்றேன்

அருவாய் உருவாய் தெரிவாய் உனையே
அனுதினமும் நினைக்கின்றேன்
திருவாய் மலரும் சிரிப்பின் அழகில்
தினமும் என்னை மறக்கின்றேன்

கருவாய் உருவாய் ஆனேன் எனையே
காலடியில் தருகின்றேன்
குருவாய் வருவாய் அருள்வாய்என்று
குவலயத்தில் அலைகின்றேன்

சருகாய் புவியில் சரியும் முன்னே
சரவணனைப் பணிகின்றேன்
தருவாய் நலமே தவமே என்று
சந்நிதியில் புரள்கின்றேன்.

-இந்துமகேஷ்
(13.05.2004)

Friday, July 07, 2006

வரும் உந்தன் அன்பே மெய்யே!









திருப்புகழைப் பாடிப் பாடி
தினந்தோறும் உன்முகம் தேடி
உருகுகிறோம் ஒன்றாய்க் கூடி
ஓம் முருகா வருவாய் ஓடி!

வாழ்க்கை இது பொய்யே பொய்யே
வரும் உந்தன் அன்பே மெய்யே
காக்கும் சிவசக்தியின் சேயே
கந்தா நீ வந்தருள் வாயே!

ஆதாரம் நீஎன் றறிந்தோம்
அன்பாலே தினம் உனைப் பணிந்தோம்
தீதெல்லாம் மாய்ந்திடக் கண்டோம்
திருவடியே சரண் என விழுந்தோம்

பொருளோடு புகழும் வாழ்வும்
பொய்யென்று ஒருநாள் ஆகும்
அருள்தந்து எம்மைக் காக்கும்
அறுமுகமே நிலையென் றாகும்!

வருவதெல்லாம் உன்னால் தானே
வந்தருள்வாய் எழில்முரு கோனே
கருணையினால் வினையறுப் போனே
காத்திடுவாய் எங்களைத் தானே!

-இந்துமகேஷ்
(15.11.2004)

வேழமுகத்தான் வந்து காத்தான்.










ஐந்துகரம் கொண்டதொரு பிள்ளைமுகம் கண்டபின்பு
ஆசைகளை விட்டதடா நெஞ்சம் .இனி
அவனடியில் என்னுயிரே தஞ்சம்

விந்திலொரு கருவாகி வேடமிட்டு வந்த எனை
வேழமுகத்தான் வந்து காத்தான் -மன
வேதனைகள் யாவையுமே நீத்தான்

நொந்துமனம் வேகாமல் நுண்ணறிவு சாகாமல்
நோயகல மருந்தாக வந்தான் - ஒரு
யோகநிலை தானாகி நின்றான்


வெந்தழிந்து போகுமுடல் மீளாது எந்தனுயிர்
மீளவொரு வழியதனைக் கண்டேன் - அருள்
வேழமுகத்தைப் பற்றிக் கொண்டேன்.


-இந்துமகேஷ்.
(16.11.2004)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...