Friday, January 18, 2008

எப்பொழுதும் துணையிருக்கும் சுப்ரமண்யம்












சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் பால சுப்ரமண்யம்

அப்பனுக்குக் குருவான சுப்ரமண்யம்
- பாலசுப்ரமண்யம் -என்
அகத்திருளைப் போக்கவந்த சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
எப்பொழுதும் துணையிருக்கும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
இன்னல்களை நீக்கவந்த சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்


பக்திநெறி அறிவித்த சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
பாவந்தனை வேரறுக்கும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
சித்திதனை அள்ளித்தரும் சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம் -என்
சிந்தையிலே ஒளியாகும் சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்.


நல்லவர்க்கு நலம் அருளும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
ஞானகுரு என ஒளிரும் சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம்
தொல்லைகளைக் களைகின்ற சுப்ரமண்யம்
- பால சுப்ரமண்யம் -என்
தூயமனக் கோயில் கொண்ட சுப்ரமண்யம்
-பால சுப்ரமண்யம்



-இந்துமகேஷ்
(30.04.2004)










Sunday, January 13, 2008

கண்டாயா மனமே கண்டாயா









கண்டாயா கண்டாயா கண்டாயா
கந்தய்யனைக் கண்டாயா கண்குளிரக் கண்டாயா
கண்டாயா கண்டாயா கண்டாயா


ஆடும்மயில் ஏறிவரும் அப்பய்யனைக் கண்டாயா
சூழும்வினை தீர்க்கவரும் சுப்பய்யனைக் கண்டாயா
வள்ளிமனம் கொள்ளைகொண்ட வேலய்யனைக் கண்டாயா
வாழ்வுதர வந்தசிவ பாலய்யனைக் கண்டாயா


நீலகண்டன் தந்தநெற்றிக் கண்ணய்யனைக் கண்டாயா
நெஞ்சமெல்லாம் கோயில்கொண்ட சின்னய்யனைக் கண்டாயா
துள்ளிவரும் பகைமுடித்த வீரய்யனைக் கண்டாயா
சூரர்தமை வேரறுத்த குமரய்யனைக் கண்டாயா


ஆதிசக்தி மடிதவழ்ந்த அழகய்யனைக் கண்டாயா
ஆறுமுக சாமிஎங்கள் அருளய்யனைக் கண்டாயா
வித்தைகளைக் கற்றுத்தரும் முத்தய்யனைக் கண்டாயா
வேதத்துக்குப் பொருளுரைத்த சித்தய்யனைக் கண்டாயா


சூரியனைப் போல்ஒளிரும் பொன்னய்யனைக் கண்டாயா
துன்பஇருள் துடைக்கவந்த என்னய்யனைக் கண்டாயா
பிறேமனிலும் சிவசக்திக் குமரய்யனைக் கண்டாயா
பேரருளை அள்ளித்தரும் நல்லய்யனைக் கண்டாயா


கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா
கண்டாயா மனமே கண்டாயா

-இந்துமகேஷ்
(12.03.2004)

Tuesday, January 08, 2008

ஓம்முருகா ஓம்முருகா என்றவனை நாடு!










தித்திக்கும் தமிழ்கொண்டு பாமாலை சூடி
திருவடியில் தலைவைத்து முருகா என்றாடி
பக்திக்குள் மூழ்குமனம் பல்லாண்டு பாடி
பணிந்தாலே திருக்குமரன் வருவானே ஓடி


இரவுபகல் பாராது எப்போதும் பாடு
இன்னருளைத் தருமுருகன் அருள்வடிவைத் தேடு
உறவெனவே அவன் வருவான் உள்ளன்பினோடு
ஓம்முருகா ஓம்முருகா என்றவனை நாடு


மாங்கனியில் ஞானமதை வைத்த முருகேசன்
வள்ளிமனங் கவர்ந்தருளும் அன்பர்களின் தாசன்
ஓங்கிவளர் சூரர்தமை ஒடுக்கியருள் ஈசன்
உள்ளன்பு கொண்டவர்க்குள் உறைகின்ற வாசன்


வீணான காலங்கள் போக்கியது போதும்
வேலவனின் திருவடியே சரணமென ஓதும்
குணமென்னும் குன்றேறி நின்றாலே நாளும்
குமரனவன் அருளொன்றே காத்தெம்மை ஆளும்


ஆறுபடை நூறுபடை ஆனதிந்தக் காலம்
ஆறுமுகன் நின்றருளக் காட்டும் திருக்கோலம்
நீறுபடை நெற்றியொடு கண்டுகளித் தாடும்
நெஞ்சுடையோர் தம்மாலே நிறைந்ததுவே ஞாலம்.


-இந்துமகேஷ்
(01.12.2004)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...