Friday, November 18, 2022

வேலவா வடி வேலவா சிவ பாலகா எனைச் சேரவா -இந்துமகேஷ்

 


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


காலக் கருவறையில் கோலம் வரைந்துகொண்டு 

காத்திருந்தேன்  முருகா காத்திருந்தேன்

ஞாலம் பிறந்ததென்று நானும் பிறந்துவந்து 

பார்த்திருந்தேன் உனை பார்த்திருந்தேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வாழும் வகை இதென்று தேரும் அறிவிழந்து 

சேர்த்திருந்தேன் சொந்தம் சேர்த்திருந்தேன்

நாளும் பொழுதும் இன்பம்தேடி அலைந்து தினம் 

வேர்த்திருந்தேன் உடல் வேர்த்திருந்தேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வாடும் எனது உடற்கூடும் கலைவதற்குள் 

பாடுகின்றேன்  உன்னை பாடுகின்றேன்

பாடும் எனது தமிழ் ஆடும் உனது மயில் 

ஓடுதையா வினை ஓடுதையா


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வேலுண்டு வினை தீர்க்க

வேலுண்டு எனைக் காக்க

வேலுண்டு  பயம் இல்லை 

வேலுண்டு துயர் இல்லை

ஆடுகிறேன் மகிழ்ந் தாடுகிறேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


- இந்துமகேஷ்


கந்தனுக்கு அரோகரா- இந்துமகேஷ்








கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

ஆடினேன் பாடினேன் ஆனந்தக் கூத் தாடினேன்
தேடினேன் நாடினேன் திருவடியில் கூடினேன்
அருள்முகம் கண்டபோது ஆடினேன்
அரகரமுருகா என்று பாடினேன்
இருவினைகள் தீர்க்கும் வகை தேடினேன்
என் தலைவன் முருகன் என்று நாடினேன்
வந்தணைத்த உறவெல்லாம் வந்தவழி போயினர்
கந்தன் மட்டும் என்னிடம் காதல் கொண்டு நின்றனன்

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

வீடிழந்து நாடிழந்து வீதிதோறும் தானலைந்து 
காடளந்து மேடளந்து கால்கள் ரெண்டும் பலமிழந்து 
வாடுகின்றபோது மனம் நாடுதே 
வந்தருள்வான் கந்தன் என்று பாடுதே
வாடுகின்ற மலராய் என் வாழ்விழந்து போகுமுன்னே
சூடுகின்ற மலராய் உன் தோள்களிலே சேர்வேனே
ஆடுகின்ற மயிலேறி அருள்புரியும் சிவபாலா
நாடும் உந்தன் அடியார்க்கு நலமருள  வா வா வா!

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

-இந்துமகேஷ்

ஓம் நமசிவாய - இந்துமகேஷ்

 ஓம் நமசிவாய

- இந்துமகேஷ்







ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

நடமாடும் நாவினிலே ஓம் நமசிவாய

நமைக் காக்கும் மந்திரமே ஓம் நமசிவாய

இடையின்றி தினம் ஓதும் ஓம் நமசிவாய

எப்போதும் துணையாகும் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

நடராஜன் திருப்பாதம் நான் பற்றிக்கொண்டேன்

நான் என்பதார் என்று  நான் கண்டுகொண்டேன்

விடமுண்ட கண்டனவன் விளையாடல் கண்டேன்

வினையாவும் தீர்க்கின்ற மருந்தொன்று கண்டேன்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

விடையேதும் அறியாமல் விரைகின்ற வாழ்வில் 

விடையாக நடராஜன் முகம் காட்டி நின்றான்

கடையேனை அடியானாய்க் கவர்ந்திட்ட ஈசன்

காருண்ய விழி காட்டி எனை ஆண்டுகொண்டான்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உடல்மாறி இடம் மாறி உலைகின்ற ஆவி

உமைபாகன் சிவனாக உருமாறக்கண்டேன்

தடம் மாறிப்போகாமல் எனைத் தாங்கிக்கொண்டான்

சர்வேசன் என் வாழ்வின் பொருளாகி நின்றான்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

நடமாடும் நாவினிலே ஓம் நமசிவாய

நமைக் காக்கும் மந்திரமே ஓம் நமசிவாய

இடையின்றி தினம் ஓதும் ஓம் நமசிவாய

எப்போதும் துணையாகும் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

- இந்துமகேஷ்

    26.02.2020

துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் -இந்துமகேஷ்


துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன்
துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன்
-இந்துமகேஷ்



துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன்
துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன்
கதியாகி கணநாதன் எனைத் தாங்கினான்
கர்மவினை தீர்த்தெனது விதிமாற்றினான்
வேழமுகம்  பிரணவத்தின் வெளித்தோற்றமே
மெய்ஞானம் காண்பதற்கு வழிகாட்டுமே
காலமெல்லாம் கணபதியின் புகழ்பாடுவேன்
காலடியே தஞ்சமென்று கரையேறுவேன்
சிவனார் திருமகனே வர சித்திவிநாயகனே
பவவினைகள் நீக்கி அருள் பாலிக்கும் ஐங்கரனே
தவமறியாச் சிறியேன் நான்
தாழ்பணிந்தேன் சரணமையா
கணபதியே கற்பகமே காருண்யா காத்தருள்வாய்.
மனமுருகிட விழிபெருகிட 
உனைநினைந்திட        வினைகெடும்
தினம் வழிபட துயர் பொடிபடும் 
உனதிரு அடி துணைவரும் 
ஓம் கணநாதா ஓம் ஓம் கணநாதா ஓம்


பாடலாசிரியர்:
இந்துமகேஷ்

Thursday, November 17, 2022

கணநாதா கண்பாராய்!








கணநாதா கண்பாராய்! 
- இந்துமகேஷ்

சீர்பொலியும் ஜெர்மனியின் 
வடதிசையில் தலம் கொண்டாய்.
திருவடியைச் சரண்புகுந்தோம் 
சிவபாலா காத்தருள்வாய்.

பார்படைத்துக் காக்கின்ற 
பரமன் திருமகனே
பாதமலர் பற்றுகிறோம்- 
கணநாதா கண்பாராய்!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே

பேரருளைப் பொழிகின்ற
பிரணவனே! ஐங்கரனே !
ஞானவடி வானவனே!
ஞாலமிதைக் காப்பவனே!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

உன்னடியே துணை என்று
உருகியுனைச் சரணடைந்தோம்!
மாமணியே கணபதியே
வந்தருள்வாய் குணநிதியே!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

தெள்ளுதமிழ்ப் பாட்டிசைக்கும்
தேசமதைத் தாண்டிவந்தோம்
ஜெர்மனியில் பிறேமனில் உன்
திருமுகத்தைக் கண்டுநின்றோம்!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

அள்ள அள்ளக் குறையாத
அருளமுதை ஊட்டுகின்றாய்
அன்புமலர் நாம்தொடுத்தோம்
ஆண்டருள வேண்டுமையா!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

-இந்துமகேஷ்

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...