Friday, December 21, 2007

கந்தனே நீயே நிரந்தரமே!










பன்னிரு விழியால் பார்ப்பாயாம்
பாவங்கள் யாவையும் தீர்ப்பாயாம்
என்னிரு கண்களைப் பார்த்தாயா?
ஏன் அழுதாய் எனக் கேட்டாயா?

மூவிரு முகங்கள் கொண்டாயாம்
முருகா என்றால் வருவாயாம்
பாவிஎன் நிலையைப் பார்த்தாயா?
பக்கத்தில் வந்தருள் செய்தாயா?

வேலினை உன்அன்னை தந்தாளாம்
சூரனை நீவென்று வந்தாயாம்
சூழ்வினையாலே நான் வெந்தேனே
சுப்பையா நீ வந்து காத்தாயா?

கானக வள்ளியைக கண்டாயாம்
காதலித்தே மனம் கொண்டாயாம்
நானுரு கும்நிலை கண்டாயா?
நாயகனே கரம் தந்தாயா?

ஆறுபடை அன்று கொண்டாயாம்
நூறுபடை இன்று கண்டாயாம்
ஆறுதல் தேடிநான் வந்தேனே
அஞ்சாதே என்றருள் செய்தாயா?

கூறிடும் மந்திரம் கேட்டாயாம்
குன்றங்கள் நின்றருள் செய்தாயாம்
காலமெல்லாம் பெயர் சொன்னேனே
கந்தனே நீதுணை நின்றாயா?

ஓம்!சர வணபவ சண்முக நாதா
ஓங்காரப் பொருள்கொண்ட என்குரு நாதா!
காலமெல்லாம் உந்தன் மந்திரமே
கந்தனே நீயே நிரந்தரமே!



என்னிரு கண்களைப் பார்த்தாயே
ஏன்அழு தாய்எனக் கேட்டாயே
பாவிஎன் நிலையைப் பார்த்தாயே
பக்கத்தில் வந்தருள் செய்தாயே

சூழ்வினையாலே நான் வெந்தேனே
சுப்பையா நீ வந்து காத்தாயே
நானுரு கும்நிலை கண்டாயே
நாயகனே கரம் தந்தாயே

ஆறுதல் தேடிநான் வந்தேனே
அஞ்சாதே என்றருள் செய்தாயே
காலமெல் லாம்உந்தன் மந்திரமே
கந்தனே நீயே நிரந்தரமே!


ஓம்சர வணபவ சண்முக நாதா
ஓம்சர வணபவ சண்முக நாதா
ஓம்சர வணபவ சண்முக நாதா!



-இந்துமகேஷ்
(16.11.2004)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...