Wednesday, July 23, 2014

காத்திடுவாய் என்றும் எமையே!



















இப்பிறவி பெற்ற பலன் ஏதென்று அறியாமல்
இருந்தநாள் இறந்ததம் மா
இருவிழியில் நீர்சொரிய இணையடியைப் பற்றியபின்
இன்னல்கள் தீர்ந்ததம் மா

தப்பாதுன் சந்நதியில் சரணமென வீழ்:ந்ததனால்
சஞ்சலங்கள் தீர்ந்ததம்மா
தாயாகி வந்த அருட் காமாட்சி நின்னருளால்
தீயவினை தீய்ந்ததம் மா

பாராள்வோர் சீராளர் பாமரர்கள் எவரெனினும்
பக்தியுடன் உனைப் பணிந்தால்
நேரான வாழ்வளித்து நித்தியமாய் இன்பமுற
நின்னருளை தந்த ருளுவாய்



சீரான தேரேறி திருவுலா வருமுந்தன்
திருமுகம் காணவைத்த
சேயான பாஸ்கரர்தம் திருப்பணிகள் சிறந்திடவே
தேவி நீ பலமருள்வாய்!

சீரார்ந்த ஜெர்மனியில் திருக்கோயில் கொண்டமர்ந்து
சேய்களெமை ஆளவந்தாய்
திசையறியாப் படகாக தடம்மாறும் மனங்களுக்கு
திசையாக நீ யிருந்தாய்





கார்மேக வண்ணனவன் தங்கையென நின்றருளும்
காமாட்சி என்னும் உமையே
கனவல்ல வாழ்வென்று கருணைமுகம் தனைக் காட்டி
காத்திடுவாய் என்றும் எமையே!


அடியவன்
இந்துமகேஷ்
(2007)

Friday, May 02, 2014

இனிமேல் பிறவா வரம்நீ அருள்வாய்!




இதுவோ அதுவோ எதுவோ
இனியோர் பிறவி வருமோ!

எனையாள்பவனே
உமையாள் மகனே
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!

பிறவிப் பிணிசேர்
துயரம்  களைவாய்
பெருமா யையிலே
சிதையா தருள்வாய் - சிவனார் மகனே!

மனமே அசுரர் வசமாய்க் கிடந்தேன்
வலியும் துயரும் தினமும் சுமந்தேன்!
அசுரர் தமையே அழித்தே அருளும்
குமரா!  உனை நான் பணிந்தேன் தெளிந்தேன்!

எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!

புவிமேல் வாழ்வு பொய்யாய் அறிந்தேன்!
புகழும் இகழும் சமமாய் உணர்ந்தேன்!
உருவாய் வந்தென் உளம் நீ புகுந்தாய்
அருவாய் வருவேன் பிரியா தருள்வாய்!

எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!

அழகா! குமரா! அமரர் தலைவா!
மயில்வாகனனே! வடிவேல் முருகா!

எனையாள் குகனே! உமையாள் மகனே!
இருள்சூழ் உலகில்
இனிமேல் பிறவா
வரம் நீ அருள்வாய் - வடிவேலவனே!



-இந்துமகேஷ்
02.05.2014

Thursday, February 13, 2014

உன்னதத் திருநாள் போற்றி!



அருளமுது ஊட்டியெமை ஆதரிக்கும் அன்னையவள்
அடிக்கமலம் போற்றி போற்றி
ஆனந்தத் தாண்டவனின் சரி பாதியாய் அமர்ந்த
அருள்வடிவே போற்றி போற்றி
இருள்மாயை சூழ்கின்ற இன்னலினை ஓட்டியெமை
இரட்சிப்பாய் போற்றி போற்றி
ஏழேழு பிறவியிலும் எங்கள் துணையாகவரும்
எழிலுருவே போற்றி போற்றி

நிலம் பெயர்ந்து வந்தவரை நிழலாகத் தொடர்கின்ற
நித்தியமே போற்றி போற்றி
ஜெர்மனியின் ஹம்நகரில் நிலையாகக் குடிகொண்ட
ஜெகன்மாதா போற்றி போற்றி
பலமிழந்து நின்றோர்க்கும் பாஸ்கரர் தம் வழியாக
பக்தியினைத் தந்தாய் போற்றி
பாரெங்கும் தமிழரினம் சீர்பெற்று வாழ்ந்திடவே
பதமருள்வாய் போற்றி போற்றி

காமாட்சி பேர்கொண்டு கதியாகி நின்றெமக்கு 
கருணையினைத் தந்தாய் போற்றி
கண்கொண்ட பேறதனை காணவருள் செய்திட்ட
கற்பகமே போற்றி போற்றி
நாமாட்சி செய்கின்ற நல்லதமிழ் ஈழமதும்
நலியாது காப்பாய் போற்றி
நானிலத்தோர் உன்பேரை நாள்தோறும் உச்சரிக்கும்
நலமருள்வாய் போற்றி போற்றி

தலமான ஒருவீடு தனதாகத் தான் கொண்ட
சத்தியமே போற்றி போற்றி
சர்வாலங் காரியெனத் தேரூர்ந்து களிப்பூட்டும்
தரிசனமே போற்றி போற்றி
உலகாளப் பலநூறு வடிவங்கள் எடுத்தெங்கள்
உளமாளும் தாயே போற்றி
உனக்கான திருக்கோயில் உவந்தின்று குடிகொள்ளும்
உன்னதத் திருநாள் போற்றி

-அடியவன்
இந்துமகேஷ்


(ஹிந்து சங்கரர் சிறி காமாட்சி அம்பாள் ஆலயம்
மகா கும்பாபிஷேகம் மலர் 2002இல் பிரசுரமானது)




என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...