அருள்பொங்கும் சிவசக்திக் குமரன்தன் பதம்பாடி
மருள்நீங்கி வாழ்வுதனில் மாண்புறவே - பொருள்கொண்டு
புனையும் திருவூஞ்சல் பொலிவுறத்தான் துணைவருவாய்
வினைகள் கடியும் சித்திவி நாயகனே.
1.
அந்தமும் ஆதியிலா ஆனந்தத் தாண்டவனின்
மைந்தனே! ஈசனுக்கும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கும் குருவானாய் சிவசக்திக் குமரையா!
வந்தமர்ந்த ஜெர்மனியின் வளமான பிறேமனிலும்
உந்தனருட் பார்வைக்காய் உளமுருகும் எங்களது
சிந்தையிலே நீயிருந்து திருவூஞ்சல் ஆடீரோ!
2.
தெங்கு பனைசூழ் ஈழத் திருநாட்டின் குருபரனே
எங்கள் தவப்பயனாய் பிறேமனிலும் வந்தமர்ந்தாய்
பொங்கும் மகிழ்வோடு பொன்னுாஞ்சல் கட்டிவைத்தோம்
எங்கும் அருள்விளஙக எழுந்தருளும் எமதிறைவா
ஐங்கரனுக் கிளையோனே ஆறுமுக வேலவனே
இங்கும்உன் னடியவர்க்காய் திருவூஞ்சல் ஆடீரோ!
3.
அண்ணன் விநாயகனும் அன்னை மனோன்மணியும்
உன்னருகே வீற்றிருக்க ஒளிசிந்தும் சண்முகனே
புண்ணியனே சிவக்திக் குமரனே நின்மலர்த்தாள்
எண்ணித் துதிக்கும் எங்கள் இன்னல்களைத் தீர்ப்பவனே!
வண்ணமயில் வாகனனே வடிவழகா உன்னருளை
திண்ணமதாய் நாம்பெறவே திருவூஞ்சல் ஆடீரோ!
4.
வானோர் துயர்களைய வடிவேல் எடுத்த தேவ
சேனாபதியே! சிவக்கொழுந்தே நம்தமிழர்
ஊனாய் உயிராய் உணர்வாய்க கலந்தவனே
ஆனாய் எம் உறவென்றே அகிலமெல்லாம் காத்திடவே
தானாக வந்துதித்து தன்கருணை தந்தருளும்
கோனே மனமகிழந்து திருவூஞ்சல் ஆடீரோ!
5.
ஆறுபடை வீடமைத்தோம் அழகழகாய்த் தமிழகத்தில்
கூறுபட்ட தமிழர்களோ குடிபுகுந்த ஜெர்மனிலும்
தேறுதலைத் தேடி உந்தன் திருவடியைச் சரண்புகுந்தோம்
வேறுதுணை ஏதுமில்லை வேலவனே நின்புகழைக்
கூறுமடியார்களொடு கூடிமனம் களிப்புறவே
ஆறுமுகா அருளமுதே திருவூஞ்சல் ஆடீரோ!
6.
பாரோடும் விண்ணோடும் பரந்தருளைத் தான் பொழியும்
சீராளா எங்கள் சிவசக்திக் குமரேசா!
போராடும் நம் தமிழர் புதுவாழ்வு தான் பெறவே
சீரோடு வந்தெங்கள் சிந்தைதனில் குடிகொண்டாய்
ஆராவமுதே அருட்கடலே அற்பதமே
வாரீர் நின் புகழ்பாடதிருவூஞ்சல் ஆடீரோ!
7.
நல்லூரும் சந்நிதியும் கதிர்காமத் திருத்தலமும்
பல்லோரும் போற்றும் ஈழப் பதியாகக் குடிகொண்ட
வல்லோனே எங்கள் வடிவேலே தொல்லைகளை
இல்லாது ஒழிப்போனே எழில்சக்திக் குமரேசா
சொல்லாலே நாம்தொடுத்த தமிழ்மாலை தானணிந்து
நல்லோனே நாம் காண திருவூஞ்சல் ஆடீரோ!
8
குன்றேறி நின்றெங்கள் குறைதீர்க்கும் குமரகுரு
மன்றாடி நாமழைக்க மயிலேறி வந்திடுவான்
அன்றாடம் நம்வாழ்வில் அவன் நாமம் அல்லாமல்
நின்றாடும் பயம்வெல்ல நிலையேது புவிவாழ்வில்
ஒன்றோடு ஒன்றாக உயிராகி நின்றோனே
இன்றெங்கள் விழிகாண திருவூஞ்சல் ஆடீரோ
9.
வானகத்து தேவயானை மனமகிழும் மணவாளா
கானகத்து வள்ளியினைக் கரம்பிடித்த குமரேசா
ஊனகற்றும் உயிர்க்காதல் உன் கருணைக் காதலெனும்
ஞானமற்றுப் போனவர்க்கும் நல்லறிவைத் தருபவனே
நானகன்று நீியிருந்து நல்லருளைத் தந்தருள்வாய்
தேனையொத்த தமிழ்க்குமரா திருவூஞ்சல் ஆடீரோ!
10.
முத்துநகை தெய்வானை கொத்துமலர் குறவள்ளி
கைத்தலத்தில் வடிவேல் உன் காலடியில் வண்ணமயில்
இத்தனையும் உன்னழகை எடுத்தியம்பும் -வீரமெனில்
பித்தமிகு சித்தமதால் பிளவுகண்ட சூரனவன்
செத்தபின்னும் சாகாமல் சேவற்கொடி யாகிநின்றான்
அத்தனையும் அருகிருக்க திருவூஞ்சல் ஆடீரோ!
- இந்துமகேஷ்.
(ஜெர்மனி-பிறேமன் நகர் சிறீ சிவசக்திக்குமரன் ஆலயத்தில் 02.08.2002 அன்று நடைபெற்ற சங்காபிஷேகத்தின்போது பாடப்பெற்றது)
No comments:
Post a Comment