Friday, December 21, 2007

கந்தனே நீயே நிரந்தரமே!










பன்னிரு விழியால் பார்ப்பாயாம்
பாவங்கள் யாவையும் தீர்ப்பாயாம்
என்னிரு கண்களைப் பார்த்தாயா?
ஏன் அழுதாய் எனக் கேட்டாயா?

மூவிரு முகங்கள் கொண்டாயாம்
முருகா என்றால் வருவாயாம்
பாவிஎன் நிலையைப் பார்த்தாயா?
பக்கத்தில் வந்தருள் செய்தாயா?

வேலினை உன்அன்னை தந்தாளாம்
சூரனை நீவென்று வந்தாயாம்
சூழ்வினையாலே நான் வெந்தேனே
சுப்பையா நீ வந்து காத்தாயா?

கானக வள்ளியைக கண்டாயாம்
காதலித்தே மனம் கொண்டாயாம்
நானுரு கும்நிலை கண்டாயா?
நாயகனே கரம் தந்தாயா?

ஆறுபடை அன்று கொண்டாயாம்
நூறுபடை இன்று கண்டாயாம்
ஆறுதல் தேடிநான் வந்தேனே
அஞ்சாதே என்றருள் செய்தாயா?

கூறிடும் மந்திரம் கேட்டாயாம்
குன்றங்கள் நின்றருள் செய்தாயாம்
காலமெல்லாம் பெயர் சொன்னேனே
கந்தனே நீதுணை நின்றாயா?

ஓம்!சர வணபவ சண்முக நாதா
ஓங்காரப் பொருள்கொண்ட என்குரு நாதா!
காலமெல்லாம் உந்தன் மந்திரமே
கந்தனே நீயே நிரந்தரமே!



என்னிரு கண்களைப் பார்த்தாயே
ஏன்அழு தாய்எனக் கேட்டாயே
பாவிஎன் நிலையைப் பார்த்தாயே
பக்கத்தில் வந்தருள் செய்தாயே

சூழ்வினையாலே நான் வெந்தேனே
சுப்பையா நீ வந்து காத்தாயே
நானுரு கும்நிலை கண்டாயே
நாயகனே கரம் தந்தாயே

ஆறுதல் தேடிநான் வந்தேனே
அஞ்சாதே என்றருள் செய்தாயே
காலமெல் லாம்உந்தன் மந்திரமே
கந்தனே நீயே நிரந்தரமே!


ஓம்சர வணபவ சண்முக நாதா
ஓம்சர வணபவ சண்முக நாதா
ஓம்சர வணபவ சண்முக நாதா!



-இந்துமகேஷ்
(16.11.2004)

Thursday, November 22, 2007

வெற்றிமயில் துணையிருக்கு!








ஆடும் விளையாட்டு என்று ஆனதையா வாழ்க்கை
ஆறுமுகா உன்னைக்கண்டு தீர்ந்ததையா வேட்கை

வேறுதுணை ஏதுமில்லை
வேலன்முகம் அருகிருக்கு
வேதனைகள் ஏதுமில்லை
வெற்றிமயில் துணையிருக்கு

ஓடும்மனம் ஓடி ஓடி அலைந்ததையா அன்று
ஓம்முருகா என்றுருகிக் கனிந்ததையா இன்று

உற்றம் சுற்றம் ஏதுமில்லை
ஓர்வடிவேல் அருகிருக்கு
பற்றுப் பந்தம் ஏதுமில்லை
பரமகுரு துணையிருக்கு

பாடும்பொருள் நீயாகிப் பணிந்ததையா நெஞ்சம்
பாதமலா் பற்றி அது அடைந்ததையா தஞ்சம்

வேண்டுவது ஏதுமில்லை
வேல்முருகன் துணையிருக்கு
ஆண்டருள்வான் என்னை என்று
அச்சமில்லா மனமிருக்கு!


-இந்துமகேஷ்
(02.05.2004)

Friday, November 16, 2007

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு!











வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

நாளை நாளை என்று நம்பியிருந்தாலே
ஞானம் பிறப்பதில்லை -அதில்
நன்மைகள் ஏதுமில்லை- இவன்
தாளைப் பிடித்தபின் நாளை எனஒரு
நாளும் இருப்பதில்லை - நிகழ்
காலம் மறைவதில்லை

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

கூடும் வினைதனை வேரறுப்பான் -இனி
குற்றங்கள் ஏதுமில்லை -கொடுங்
கூற்றுவன் ஆட்சியில்லை -இவன்
ஆடும் மயிலினில் ஏறிவருகையில்
ஆனந்தம் வேறு இல்லை- இனி
ஆசைகள் ஏதுமில்லை

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

-இந்துமகேஷ்
(14.05.2004)

Thursday, November 15, 2007

ஒளி நிறைந்தது!













நீலமயில் ஆடிவரும் நேரம் வந்தது
நெற்றிக் கண்ணன் மகன்அருளும் காலம் வந்தது
சோலைமலர் பூக்களெல்லாம் சுகமடைந்தது
சுந்தரவேல் முருகன்தோளைத் தொட்டுக் கொண்டது

பாடிவரும் மனங்களெல்லாம் பக்திகொண்டது
பரமகுரு திருவடியைப் பணிந்துகொண்டது
கூடிவந்த துன்பமெல்லாம் எட்டிச்சென்றது
குமரன்விழி பார்த்ததனால் வினை அகன்றது

ஆசையெனும் நோய் தணிந்து அன்பு வென்றது
அருள்முருகன் பார்வையினால் துயர் அகன்றது
வேசமென்னும் மாயையெல்லாம விலகிச்சென்றது
வேல்முருகன் அருள்கனிந்து வினைகள் மாய்ந்தது

பொய்மைகொண்ட காலமெல்லாம் போயொழிந்தது
பொன்னடிக்குள் எந்தனுயிர் போய்ப் புகுந்தது
வையகத்து உயிர்கட்கெல்லாம் வழிபிறந்தது
வண்ணமயில் வாகன்அருள் ஒளிநிறைந்தது.

-இந்துமகேஷ்
(18.05.2004)

Friday, October 05, 2007

நெஞ்சமெல்லாம் நீயாக...





நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்


உன்னைத்தேடி அலையும் எந்தன்
உள்ளம் அறிய வில்லையோ
உணர்ந்துகொண்டும் அருள்வழங்கும்
எண்ணம் உனக்கு இல்லையோ?

என்னைவிட்டு நீ பிரிந்தால்
எங்குசெல்வேன் கந்தையா - என்
இதயக்கோயில் திறந்துவைத்தேன்
எழுந்தருள்வாய் வேலய்யா!

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்!


மாடி மனை கோடிசெல்வம்
வரங்கள் கேட்டதில்லையே - என்
வாழ்வைக் காக்க வேண்டுமென்றும்
வந்துநின்ற தில்லையே

கூடிவந்த வினையறுக்க
குமரன் உன்னைத் தேடினேன் - நீ
குன்றில் ஏறி நின்று கொண்டாய்
நிலைதளர்ந்து வாடினேன்

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்

ஆவதெல்லாம் கந்தனாலே
அடியவர்கள் சொல்கிறார் - உன்
அருள்வழங்கும் விழிகளாலே
துயர்கள் யாவும் வெல்கிறார்

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்

தேவர் துயர் தீர்த்து வைத்து
சிரித்துநின்றாய் வேலவா -என்
சிந்தையிலே உனைப்பதித்தேன்
சீக்கிரமாய் ஆளவா!

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள்பணிந்து
சந்நிதியை நாடினேன்

அஞ்சுதல் ஏன் என்றுரைத்து
அபயமதைத் தந்தவா
ஆறுமுகம் ஓர் முகமாய்
அருள்பொழியும் வேலவா!

நெஞ்சமெல்லாம் நீயாக
நிம்மதியைத் தேடினேன்
தஞ்சமென்று தாள் பணிந்து
சந்நிதியை நாடினேன்!


-இந்துமகேஷ்
10.09.2004 பகல்.

Tuesday, July 03, 2007

வண்ணமயில் வாகனனை வந்தருளச் சொல்லாயோ?







வள்ளியம்மா வள்ளியம்மா
வந்தருள வேண்டுமம்மா
வள்ளல் குமரேசனுக்கோர்
வார்த்தை சொல்ல வேண்டுமம்மா!


அள்ளி அள்ளி அன்பு தந்தால்
ஆறுமுகன் வந்தருள்வான்
எண்ணி எண்ணி நான் இருந்தேன்
இன்னுமவன் அருளவில்லை


பால்பழத்தை நான் கொடுத்து
பாதத்திலே தவம் கிடந்தேன்
வேலெடுத்த திருமுகத்தான்
விழிதிறந்து பார்க்கவில்லை


கானகத்துக் குறமகள் உன்
காதலுக்காய் தான் அலைந்து
தேன்கலந்த தினைமாவைத்
தின்று பசி ஆறியவன்

ஊனகற்றி நின்ற எந்தன்
உள்ளமதை உணரானோ
ஏனருளை வழங்கவில்லை
என்றொருக்கால் கேளாயோ?


இப்பிறவி தப்பிவிட்டால்
எப்பிறவி வாய்த்திடுமோ
தப்பி இனி நான் பிறந்தால்
சண்முகனைக் காண்பேனோ

முற்பிறவி செய்தவினை
மூண்டெரிய வேண்டுமம்மா
இப்பிறவி தனில் குமரன்
எழுந்தருள வேண்டுமம்மா!


கண்விழித்துக் காத்திருந்தேன்
கந்தன் முகம் காண்பதற்கு
மண்படைத்த ஈசன்மகன்
வந்தருள மாட்டானோ

சண்முகனைக் காணுமுன்னே
சாந்திதனைக் காண்பேனோ
வண்ணமயில் வாகனனனை
வந்தருளச் சொல்லாயோ?


- இந்துமகேஷ்
27.04.2004

Friday, June 01, 2007

யாமிருக்கப் பயம் ஏன்?










யாமிருக்கப் பயம் ஏன்?
கந்தன் சொன்னது - அவன்
நல்லருளே வாழ்வுதனில்
இன்பம் என்பது



பூமியிலே நாம் வாழும்
வாழ்வு என்பது - சிறு
புல்நுனியில் பனிபோல
நீங்கிச் செல்வது


ஆம் இதற்குள் நாம் உறுதி
என்று கொள்வது -அருள்
ஆறுமுகன் சேவடியைப்
பற்றி நிற்பது


தீமைகளை விட்டுவிடும்
உள்ளம் என்பது -சிவ
செல்வமுத்துக் குமரனுக்கே
இல்லம் என்பது


ஓம்முருகா ஓம்முருகா
என்று சொல்வது -உன்
பாவவினை வேரறுக்க
என்றும் வல்லது


கொண்டதுயா் யாவும் இனி
வென்று விடலாம் -அவன்
குன்றைவிட்டு உன்னிடமே
நின்று விடலாம்


பண்டு தொட்ட பிறவிப்பிணி
விட்ட கன்றிடும் - அவன்
பாதமலா் பற்றிவிடு
பயம் அகன்றிடும்



-இந்துமகேஷ்
01.05.2004

Thursday, May 17, 2007

என்னில் கலந்திடவே வருவாய்!










உருகி உருகி கண்ணீர்
பெருகிப் பெருகி உந்தன்
அருளைத் தேடுகிறேன் முருகா!- நீ
அருகில் அருகில் என்று வருவாய்?
அருகில் அருகில் என்று வருவாய்?


அருகில் அருகில் வர
வினைகள் கருகிவிடும்
பிறவிப் பயன்பெறுவேன் முருகா! - நீ
அருளைப் பொழிய என்று வருவாய்?

அருளைப் பொழிய என்று வருவாய்?
அருளைப் பொழிய மனம்
இருளைக் களையும் உந்தன்
அடியில் நிலைத்திடுவேன் முருகா! - நீ
அபயம் வழங்க என்று வருவாய்?

அபயம் வழங்க என்று வருவாய்?
அபயம் வழங்க எந்தன்
துயர்கள் கரையும் உந்தன்
ஒளியில் எனைக் கரைப்பேன் முருகா!- நீ
உயிரின் உயிரெனவே வருவாய்!
உயிரின் உயிரெனவே வருவாய்!


உயிரின் உயிரென உன்
உறவில் கலந்த பின்னே
எனதென் றெதுவுமில்லை முருகா! - நீ
என்னில் கலந்திடவே வருவாய்!
என்னில் கலந்திடவே வருவாய்!



-இந்துமகேஷ்
16.08.2004

Monday, April 09, 2007

பொருளானேன் இன்று!















எல்லையில்லாப் பரம்பொருளின்
இணையடியைப் பற்றிவிட்டாய்
இனி உனக்கோர் குறையில்லை துயரில்லை மனமே
ஏகாந்தன் சந்நிதியில் இளைப்பாறு தினமே!


வள்ளல் குமரேசன் வரம்தந்த பின்னாலே
வாழ்வொன்று கண்டேன்
மதிமயக்கம் மறைந்ததய்யா!


நிலையில்லா வாழ்வென்று நினைந்தேனே அன்று
நீ வந்தாய் உன்னடியில் நிலையானேன் இன்று!


அலைமீது குமிழ்போலே வாழ்வென்றேன் அன்று
ஐயனே உன் அருளாலே அலையானேன் இன்று

விழிகாணும் காட்சியெல்லாம் கனவென்றேன் அன்று
வேலவனே மெய்யாயுன் விழிகண்டேன் இன்று

ஒளியில்லா மனத்தோடு உலைந்தேனே அன்று
ஓம் முருகா என் எழுந்தேன் ஒளியானேன் இன்று

அருள்காட்டும் முகம்தேடி அலைந்தேனே அன்று
ஆண்டவனே உனையறிந்தேன் அருளானேன் இன்று

பொருளில்லா காலங்கள் புதைத்தேனே அன்று
பொன்னையா உனைப்பற்றிப் பொருளானேன் இன்று

Monday, February 19, 2007

குருவாய் நீ வந்தருள் செய்தால்...









கந்தனின் நாமமே கருணை என்றாகும்
கந்தனின் நாமமே கவலைகள் போக்கும்
கந்தனின் நாமமே இன்பம் என்றாகும்
கந்தனின் நாமமே இன்னல்கள் போக்கும்
கந்தனின் நாமமே உலகம்என்றாகும்
கந்தனின் நாமமே உன்னுயிர் காக்கும்


ஒரு நாமம் அறிந்தேன்ஓம் ஓம்
ஓம் என்று உனைநான் பணிந்தேன்
முருகா உன் திருமுகம் கண்டேன்
முக்திக்கொரு வழியினைக் கண்டேன்

திருவாயில்சிந்திடும் புன்னகை
தீவினைகள் எரித்தெனைக் காக்கும்
குருவாய் நீ வந்தருள் செய்தால்
அருள்ஞானம் எனக்குள் பூக்கும்

கருவாய் நான் உயிர்கொண்டபோதே
கந்தா நீ என்னுடன் இருந்தாய்
உருவாய் நான் உலகினைக்கண்டேன்
உலகெங்கும் நீயெனக் கண்டேன்

அருள்வாய்நீ என்றுன்னைத் தொழுதால்
அல்லல்கள் விட்டெமை நீங்கும்
பெருவாழ்வைத் தருபவன்நீயே
பேரின்பப் பெரும்பொருள் நீயே!


-இந்துமகேஷ்
27.06.2004

Thursday, February 01, 2007

உனக்காகப் பாடுகிறேன்


ஓம் முருகா என்றுருகி
உனக்காகப் பாடுகிறேன்
உன்னடியைக் காண்பதற்கே
உயிர்சுமந்து வாடுகிறேன்

கண்ணிரண்டும் பெற்ற பலன்
கந்தன் முகம் கண்டது - நான்
காதிரண்டும் பெற்ற பலன்
கந்தன் புகழ் கேட்டது

கையிரண்டும் பெற்றபலன்
கந்தனுக்காய் குவிந்தது நான்
காலிரண்டும் பெற்ற பலன்
கந்தனிடம் சென்றது

வாயினாலே பெற்றபலன்
கந்தன் பெயர் சொன்னது - நான்
வாழுகின்ற மூச்சின் பலன்
கந்தனுக்காய் உயிர்த்தது

சிரத்தினாலே பெற்ற பலன்
கந்தனுக்காய் பணிந்தது - நான்
சிந்தையாலே பெற்ற பலன்
கந்தனையே நினைத்தது

மேனியாலே பெற்ற பலன்
கந்தன் தொண்டு ஆனது - நான்
மேதினியில் பிறந்த பலன்
கந்தனாலே நிறைந்தது.

-இந்துமகேஷ்
02.07.2004


Monday, January 29, 2007

காதலினால் உருகுகிறேன்












காணிக்கை தர எந்தன் கண்ணீரே போதாதா?
கந்தா உன் மனமிரங்கி கருணை செய்தால் ஆகாதா?


ஏதுக்கோ வாழ்வென்று இதுவரையில் புரியவில்லை
இன்றுன்னை நானறிந்தேன் இனி எனக்கோர் துயரில்லை
வீணுக்காய் நானலைந்து வீழ்ந்த கதை போதுமையா
வேலவனே உன்னால் நான் மீண்டும் எழ வேண்டுமையா!

வானகத்துத் தேவருக்கும் வதைசெய்த சூரருக்கும்
நீயளித்த கருணையது நெஞ்சமதை உருக்குதையா
கானகத்து வள்ளிக்கும் கரம்கொடுத்த மணவாளா
காதலினால் உருகுகிறேன் கண்டுமனம் இளகாதா

சிவசக்திக்குமரா உன் திருவடியைப் பற்றுகிறேன்
தினந்தோறும் உன்பெயரே உச்சரித்துக் கரைகின்றேன்
தவக்கோலம் கொள்ளாமல் சன்னதிக்கு வருகின்றேன்
சஞ்சலங்கள் தீர்த்தெமக்கு சாந்தி தர மாட்டாயா!


-இந்துமகேஷ்
(16.03.2004)

Sunday, January 28, 2007

மனதோடு உறவாட மயிலேறி வருவான்











மனதோடு உறவாட மயிலேறி வருவான்
வடிவேலன் துணையாகி அருள்மாரி பொழிவான்

குறமாது மணவாளன் குடிகொண்ட பின்னே
குறையேது புவிமேதில் நீயாறு மனமே
நீயாறு மனமே நீயாறு மனமே
நீயாறு மனமே நீபாடு தினமே!

தொடர்கின்ற வினையோடு சுகம் காணுவாயோ
துணையாக வரும் வேலன் முகம் காணுவாயோ
இடர்கண்டு மனம் நொந்து உயிர் நீங்குவாயோ
இருள் நீக்கும் அருள் நாதன் பதம் தாங்குவாயோ

குறமாது மணவாளன் குடிகொண்ட பின்னே
குறையேது புவிமேதில் நீயாறு மனமே
நீயாறு மனமே நீயாறு மனமே
நீயாறு மனமே நீபாடு தினமே!

வளர்கின்ற பொழுதாகி வாழ்கின்ற காலம்
மறைகின்ற பொழுதொன்றில் எதுவந்து சேரும்
முருகா என்றழைத்தாலே உனைவந்து காக்கும்
முகம் ஆறுமுகம் அன்றி துணையேதுயார்க்கும்

குறமாது மணவாளன் குடிகொண்ட பின்னே
குறையேது புவிமேதில் நீயாறு மனமே
நீயாறு மனமே நீயாறு மனமே
நீயாறு மனமே நீபாடு தினமே!

மனதோடு உறவாட மயிலேறி வருவான்
வடிவேலன் துணையாகி அருள்மாரி பொழிவான்

-இந்துமகேஷ்
19.03.2004

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...