Sunday, August 13, 2023

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.


என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.



-இந்துமகேஷ்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


உன்னை நினைந்து நினைந்து

நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து

கண்கள் கசிந்து கசிந்து

உன்னில் கலந்தேன்


உன்னில் கலந்து கலந்து

அன்பில் கரைந்து கரைந்து

என்னை மறந்து மறந்து 

உயிர் வளர்த்தேன்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


உயிர் வளர்த்து வளர்த்து

உடல் சலித்து சலித்து

மனம் தவித்து தவித்து

மண்ணில் பிறந்தேன்


மண்ணில் பிறந்து பிறந்து

துன்பம் சுமந்து சுமந்து

என்னை இழந்து இழந்து

உன்னை அறிந்தேன்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


உன்னை அறிந்து அறிந்து

உண்மை உணர்ந்து உணர்ந்து

உள்ளம் தெளிந்து தெளிந்து

உன்னை நினைந்தேன்


முருகா முருகா  முருகா!

அருவே உருவே எனதாருயிரே

உருகும் மனதுள் உறையும் திருவே

முருகா முருகா முருகா!


-இந்துமகேஷ்

(மாசி 2023)



Friday, February 17, 2023

பிரியாத வரம் ஒன்று கேட்டேன் -இந்துமகேஷ்

 




பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


இருள் மாய வினை நீக்கி

அருள் ஞான ஒளியேற்றி

 எனை ஆளும் முருகா உன்

திருநாமம் தினம் பாடி

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


இறவாமல் பிறவாமல் இகவாழ்வில் சுழலாமல்

மறைஞானப் பொருளோனே

மயிலேறும் பெருமானே

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


நிலையான வாழ்வுக்குப் பொருளானவா

நீங்காது என்நெஞ்சில் நிலையானவா

அலைமீது துரும்பான எனைக் காக்கவா

அருள்பொங்கும் சிவபாலா வரம் ஒன்று தா!


பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

புரியாத வாழ்வுக்குப் பொருளான குமரா - உன்னைப்

பிரியாத வரம் ஒன்று கேட்டேன்.


-இந்துமகேஷ்

(தை - 2023)

Friday, November 18, 2022

வேலவா வடி வேலவா சிவ பாலகா எனைச் சேரவா -இந்துமகேஷ்

 


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


காலக் கருவறையில் கோலம் வரைந்துகொண்டு 

காத்திருந்தேன்  முருகா காத்திருந்தேன்

ஞாலம் பிறந்ததென்று நானும் பிறந்துவந்து 

பார்த்திருந்தேன் உனை பார்த்திருந்தேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வாழும் வகை இதென்று தேரும் அறிவிழந்து 

சேர்த்திருந்தேன் சொந்தம் சேர்த்திருந்தேன்

நாளும் பொழுதும் இன்பம்தேடி அலைந்து தினம் 

வேர்த்திருந்தேன் உடல் வேர்த்திருந்தேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வாடும் எனது உடற்கூடும் கலைவதற்குள் 

பாடுகின்றேன்  உன்னை பாடுகின்றேன்

பாடும் எனது தமிழ் ஆடும் உனது மயில் 

ஓடுதையா வினை ஓடுதையா


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


வேலுண்டு வினை தீர்க்க

வேலுண்டு எனைக் காக்க

வேலுண்டு  பயம் இல்லை 

வேலுண்டு துயர் இல்லை

ஆடுகிறேன் மகிழ்ந் தாடுகிறேன்


வேலவா வடி வேலவா - சிவ

பாலகா எனைச் சேரவா


- இந்துமகேஷ்


கந்தனுக்கு அரோகரா- இந்துமகேஷ்








கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

ஆடினேன் பாடினேன் ஆனந்தக் கூத் தாடினேன்
தேடினேன் நாடினேன் திருவடியில் கூடினேன்
அருள்முகம் கண்டபோது ஆடினேன்
அரகரமுருகா என்று பாடினேன்
இருவினைகள் தீர்க்கும் வகை தேடினேன்
என் தலைவன் முருகன் என்று நாடினேன்
வந்தணைத்த உறவெல்லாம் வந்தவழி போயினர்
கந்தன் மட்டும் என்னிடம் காதல் கொண்டு நின்றனன்

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

வீடிழந்து நாடிழந்து வீதிதோறும் தானலைந்து 
காடளந்து மேடளந்து கால்கள் ரெண்டும் பலமிழந்து 
வாடுகின்றபோது மனம் நாடுதே 
வந்தருள்வான் கந்தன் என்று பாடுதே
வாடுகின்ற மலராய் என் வாழ்விழந்து போகுமுன்னே
சூடுகின்ற மலராய் உன் தோள்களிலே சேர்வேனே
ஆடுகின்ற மயிலேறி அருள்புரியும் சிவபாலா
நாடும் உந்தன் அடியார்க்கு நலமருள  வா வா வா!

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா

-இந்துமகேஷ்

ஓம் நமசிவாய - இந்துமகேஷ்

 ஓம் நமசிவாய

- இந்துமகேஷ்







ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

நடமாடும் நாவினிலே ஓம் நமசிவாய

நமைக் காக்கும் மந்திரமே ஓம் நமசிவாய

இடையின்றி தினம் ஓதும் ஓம் நமசிவாய

எப்போதும் துணையாகும் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

நடராஜன் திருப்பாதம் நான் பற்றிக்கொண்டேன்

நான் என்பதார் என்று  நான் கண்டுகொண்டேன்

விடமுண்ட கண்டனவன் விளையாடல் கண்டேன்

வினையாவும் தீர்க்கின்ற மருந்தொன்று கண்டேன்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

விடையேதும் அறியாமல் விரைகின்ற வாழ்வில் 

விடையாக நடராஜன் முகம் காட்டி நின்றான்

கடையேனை அடியானாய்க் கவர்ந்திட்ட ஈசன்

காருண்ய விழி காட்டி எனை ஆண்டுகொண்டான்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உடல்மாறி இடம் மாறி உலைகின்ற ஆவி

உமைபாகன் சிவனாக உருமாறக்கண்டேன்

தடம் மாறிப்போகாமல் எனைத் தாங்கிக்கொண்டான்

சர்வேசன் என் வாழ்வின் பொருளாகி நின்றான்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

நடமாடும் நாவினிலே ஓம் நமசிவாய

நமைக் காக்கும் மந்திரமே ஓம் நமசிவாய

இடையின்றி தினம் ஓதும் ஓம் நமசிவாய

எப்போதும் துணையாகும் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

- இந்துமகேஷ்

    26.02.2020

துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் -இந்துமகேஷ்


துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன்
துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன்
-இந்துமகேஷ்



துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன்
துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன்
கதியாகி கணநாதன் எனைத் தாங்கினான்
கர்மவினை தீர்த்தெனது விதிமாற்றினான்
வேழமுகம்  பிரணவத்தின் வெளித்தோற்றமே
மெய்ஞானம் காண்பதற்கு வழிகாட்டுமே
காலமெல்லாம் கணபதியின் புகழ்பாடுவேன்
காலடியே தஞ்சமென்று கரையேறுவேன்
சிவனார் திருமகனே வர சித்திவிநாயகனே
பவவினைகள் நீக்கி அருள் பாலிக்கும் ஐங்கரனே
தவமறியாச் சிறியேன் நான்
தாழ்பணிந்தேன் சரணமையா
கணபதியே கற்பகமே காருண்யா காத்தருள்வாய்.
மனமுருகிட விழிபெருகிட 
உனைநினைந்திட        வினைகெடும்
தினம் வழிபட துயர் பொடிபடும் 
உனதிரு அடி துணைவரும் 
ஓம் கணநாதா ஓம் ஓம் கணநாதா ஓம்


பாடலாசிரியர்:
இந்துமகேஷ்

Thursday, November 17, 2022

கணநாதா கண்பாராய்!








கணநாதா கண்பாராய்! 
- இந்துமகேஷ்

சீர்பொலியும் ஜெர்மனியின் 
வடதிசையில் தலம் கொண்டாய்.
திருவடியைச் சரண்புகுந்தோம் 
சிவபாலா காத்தருள்வாய்.

பார்படைத்துக் காக்கின்ற 
பரமன் திருமகனே
பாதமலர் பற்றுகிறோம்- 
கணநாதா கண்பாராய்!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே

பேரருளைப் பொழிகின்ற
பிரணவனே! ஐங்கரனே !
ஞானவடி வானவனே!
ஞாலமிதைக் காப்பவனே!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

உன்னடியே துணை என்று
உருகியுனைச் சரணடைந்தோம்!
மாமணியே கணபதியே
வந்தருள்வாய் குணநிதியே!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

தெள்ளுதமிழ்ப் பாட்டிசைக்கும்
தேசமதைத் தாண்டிவந்தோம்
ஜெர்மனியில் பிறேமனில் உன்
திருமுகத்தைக் கண்டுநின்றோம்!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

அள்ள அள்ளக் குறையாத
அருளமுதை ஊட்டுகின்றாய்
அன்புமலர் நாம்தொடுத்தோம்
ஆண்டருள வேண்டுமையா!

சித்தி விநாயகனே!
வர சித்தி விநாயகனே!
அருள்தரு வர சித்தி விநாயகனே!

-இந்துமகேஷ்

Sunday, April 10, 2022

முக்கண்ணாலே மூவுலகாளும் - இந்துமகேஷ்





தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

தவமேதும் புரியாத எனை ஆண்டுகொண்டாய்

இனியுன்னைப் பிரியாத வரம் ஒன்று கேட்டேன்

எனை ஆளும் வடிவேலா! அருள் செய்ய வாவா!


முக்கண்ணாலே மூவுலகாளும்

அப்பன் மகனே சுப்பையா

முன்னைப் பின்னை வினைகள் நீங்க

முன்வந் தருள்வது எப்பையா?


பக்திக் கிரங்கி அருள்தரும் பரமன்

பாதந் தனையே பணிந்தேனே

முக்திக் கொருவன் முருகா என்றுனை

பற்றித் தொழவே வைத்தானே


சங்கரன் பாலகா ஐங்கரன் சோதரா

இங்குமாய் அங்குமாய் எங்குமே நின்றவா

சந்ததம் உன்பதம் பற்றினால் வெற்றி நம்

பக்கமே நிற்குமே துக்கமேன் இக்கணம்?


துக்கம் நீங்கி சுகப்பட வைக்கும்

சுந்தர வேலா முருகய்யா

சூரர்போலப் பகை வந்தாலும்

துடைத் தெமைக் காப்பவன் நீயையா!


சக்தீ சக்தீ என்றழைத் தாலே

தாயாய் வருவாள் உன் அன்னை

சக்தி சக்தி சக்திவேல் என்றே  

சரண் புகுந்தேனே நான் உன்னை


திக்குத் திசைகள் தெரியாதலையும்

சேயெனைக் காக்க வருவாயா

சிக்கல் எனுமோர் மாயையை நீக்கி

திருவடி நிழலைத் தருவாயா?


அன்னை நீ அப்பன் நீ அறிவெனும் குருவும் நீ

முன்னை நீ பின்னை நீ முற்றுமென் பற்று நீ

என்னை நீ ஏற்றபின் ஏதொரு பயமினி

ஏறிடும் மயிலினி என்மனம் அறிக நீ.



முருகா முருகா முருகா

Sunday, February 28, 2021

உயிரென உள்ளது ஓர் சிவம் ஆனது!

 




உயிரென உள்ளது ஓர் சிவம் ஆனது!

-இந்துமகேஷ்
மாதொருபாகனை மதியணி சடையனை
வானமும் பூமியும் வாழ்த்திடும் தேவனை
சிவசிவ சிவசிவ சிவசிவ எனத்தினம்
சிந்தையில் வைத்திடு தீய்ந்திடும் ஊழ்வினை
மானிட வாழ்விது வருவது போவது
வல்வினையாகவே வளர்வது தேய்வது
ஊனுடல் என்பது ஒன்றும் இல்லாதது
உயிரென உள்ளது ஓர் சிவம் ஆனது!
அரகர சிவசிவ எனத்தினம் சொல்வது
அரனெனும் சிவனவன் அடியினைத் தொடுவது!
வருவது யாவையும் அவனருள் தருவது
வணங்கிடும் அடியவர் துயர்களைக் களைவது!
பகை பிணி நீங்திட பாவங்கள் மாய்ந்திட
உமை மணவாளனை உளத்திலே பதித்திடு
வகை வகையாகவே வரும்துயர் நீக்கிடும்
மாமருந்தாம் அரன் நாமமே போற்றிடு!
அருவுருவானவன் அந்தமில்லாதவன்
அவனியில் உயிர்க்கெல்லாம் ஆதியுமானவன்
திருவுருவாக உன் சிந்தையில் வருபவன்
சிவசிவ சங்கரன் திருவடியே சரண்!
சிவசிவ சங்கர அரகர சங்கர
சிவசிவ சங்கர அரகர சங்கர
சிவசிவ சங்கர அரகர சங்கர
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
பாடலாசிரியர்:
இந்துமகேஷ்

Thursday, November 12, 2020

உள்ளத்தில் உன்னைக் கண்டேன் -இந்துமகேஷ்



.இந்துமகேஷ்





உள்ளத்தில் உன்னைக் கண்டேன்

உன்னிலே என்னைக் கண்டேன்

பிள்ளையார் என எழுந்தாய்

பேரருள் மழை பொழிந்தாய்

பிள்ளையார் என எழுந்தாய்

பேரருள் மழை பொழிந்தாய்



சிவன் உமை செல்வா எந்தன்

சிந்தையில் நீ இருந்தாய்

பவவினை நீக்கி உந்தன்

பதத்திலே என்னை வைத்தாய்!


அருள் ஒளி காட்டி எந்தன்

அகத்திருள் நீக்கிவிட்டாய்

வருந்துயர் யாவினுக்கும்  

மருந்தென நீயிருந்தாய்


பிறந்ததன் பயன் அறிந்தேன்

பிரணவப் பொருள் உணர்ந்தேன்

அருந்தவம் புரிந்திடாமல்

அண்ணலே உனை அறிந்தேன்


கணங்களின் பதியே போற்றி

கருணையின் வடிவே போற்றி

உணர்ந்திடும் அடியார்க்கெல்லாம

உயிரெனத் திகழ்வாய் போற்றி


சீர்நிறை ஒட்டங்கேணி

திருத்தலம் கொண்டாய் போற்றி

பாரெலாம் படைத்துக் காக்கும்

பரமனின் முதல்வா போற்றி


கள்ளமில் மனத்தோர் தம்மைக்

காத்திடும் இறைவா போற்றி

பிள்ளையாரப்பா போற்றி

பிரணவா போற்றி போற்றி!




இந்துமகேஷ்

- 18. 03.2020

ஆறுமுகன் திருவடிக்கே சரணானது

 

ஆறுமுகன் திருவடிக்கே சரணானது

-இந்துமகேஷ்









மயிலாடுது சேவல் கொடியாடுது
வடிவேலன் திருக்கோயில் மணியாடுது.
வினை ஓடுது பகை ஓடுது - கந்தன்
விழிகாட்டும் கருணையினால் துயர் ஓடுது.
திருமுருகா எனத் தினம் என் நாவாடுது
சேவடியில் பணிந்தெந்தன் சிரம் ஆடுது
அருள்காட்டும் முகம் கண்டென் மனம் ஆடுது
அவன் தோளில் நான் சூட்டும் மலர் ஆடுது
வினை ஓடுது பகை ஓடுது - கந்தன்
விழிகாட்டும் கருணையினால் துயர் ஓடுது.
கோ கோ கோ என்றே குயில் பாடுது
கோ அரனுக் கோ வென்றே சேவல் பாடுது
காவலனே நீயென்று உயிர்கள் பாடுது
காத்திடுவாய் உலகையென்றென் உளம் பாடுது
வினை ஓடுது பகை ஓடுது - கந்தன்
விழிகாட்டும் கருணையினால் துயர் ஓடுது.
ஆடுதலும் பாடுதலும் அழகானது
ஆறுமுகன் திருவடிக்கே சரணானது
தேடுதலும் நாடுதலும் முடிவானது
தெளிந்தவர்க்கு ஞானமவன் வடிவானது.
இந்துமகேஷ்
(15.12.2017)



என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...