Thursday, November 22, 2007

வெற்றிமயில் துணையிருக்கு!








ஆடும் விளையாட்டு என்று ஆனதையா வாழ்க்கை
ஆறுமுகா உன்னைக்கண்டு தீர்ந்ததையா வேட்கை

வேறுதுணை ஏதுமில்லை
வேலன்முகம் அருகிருக்கு
வேதனைகள் ஏதுமில்லை
வெற்றிமயில் துணையிருக்கு

ஓடும்மனம் ஓடி ஓடி அலைந்ததையா அன்று
ஓம்முருகா என்றுருகிக் கனிந்ததையா இன்று

உற்றம் சுற்றம் ஏதுமில்லை
ஓர்வடிவேல் அருகிருக்கு
பற்றுப் பந்தம் ஏதுமில்லை
பரமகுரு துணையிருக்கு

பாடும்பொருள் நீயாகிப் பணிந்ததையா நெஞ்சம்
பாதமலா் பற்றி அது அடைந்ததையா தஞ்சம்

வேண்டுவது ஏதுமில்லை
வேல்முருகன் துணையிருக்கு
ஆண்டருள்வான் என்னை என்று
அச்சமில்லா மனமிருக்கு!


-இந்துமகேஷ்
(02.05.2004)

Friday, November 16, 2007

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு!











வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

நாளை நாளை என்று நம்பியிருந்தாலே
ஞானம் பிறப்பதில்லை -அதில்
நன்மைகள் ஏதுமில்லை- இவன்
தாளைப் பிடித்தபின் நாளை எனஒரு
நாளும் இருப்பதில்லை - நிகழ்
காலம் மறைவதில்லை

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

கூடும் வினைதனை வேரறுப்பான் -இனி
குற்றங்கள் ஏதுமில்லை -கொடுங்
கூற்றுவன் ஆட்சியில்லை -இவன்
ஆடும் மயிலினில் ஏறிவருகையில்
ஆனந்தம் வேறு இல்லை- இனி
ஆசைகள் ஏதுமில்லை

வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு
வேதனை ஓடிவிடும் - உனை
வெற்றிகள் தேடிவரும்- வடி
வேலைப் பிடித்தவன் காலைப் பிடித்திடு

-இந்துமகேஷ்
(14.05.2004)

Thursday, November 15, 2007

ஒளி நிறைந்தது!













நீலமயில் ஆடிவரும் நேரம் வந்தது
நெற்றிக் கண்ணன் மகன்அருளும் காலம் வந்தது
சோலைமலர் பூக்களெல்லாம் சுகமடைந்தது
சுந்தரவேல் முருகன்தோளைத் தொட்டுக் கொண்டது

பாடிவரும் மனங்களெல்லாம் பக்திகொண்டது
பரமகுரு திருவடியைப் பணிந்துகொண்டது
கூடிவந்த துன்பமெல்லாம் எட்டிச்சென்றது
குமரன்விழி பார்த்ததனால் வினை அகன்றது

ஆசையெனும் நோய் தணிந்து அன்பு வென்றது
அருள்முருகன் பார்வையினால் துயர் அகன்றது
வேசமென்னும் மாயையெல்லாம விலகிச்சென்றது
வேல்முருகன் அருள்கனிந்து வினைகள் மாய்ந்தது

பொய்மைகொண்ட காலமெல்லாம் போயொழிந்தது
பொன்னடிக்குள் எந்தனுயிர் போய்ப் புகுந்தது
வையகத்து உயிர்கட்கெல்லாம் வழிபிறந்தது
வண்ணமயில் வாகன்அருள் ஒளிநிறைந்தது.

-இந்துமகேஷ்
(18.05.2004)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...