அலங்கார ரூபனாய் ஒருபொழுது வருவாய்
அடுத்தநொடிப் பொழுதினிலே ஆண்டியாய் நிற்பாய்
விளங்காத வாழ்வுக்குப் பொருளாகி நின்றாய்
வேலவனே இவ்வுலகம் நிலையில்லை என்றாய்
நீலமயில் மேல்வருவாய் ஆறுமுக சாமி
நின்னடிகள் பட்டதனால் சுற்றுதடா பூமி
கோலமயில் ஆனதடா சுற்றுகின்ற பூமி
குமரன் உன்னைக் கண்டதனால் மீண்டதெந்தன் ஆவி
தன்னைச்சுற்றி உன்னைச் சுற்றும் சக்கரம்தான் பூமி
சண்முகனே உன்னைச் சுற்றத் தவிக்கும் எந்தன் ஆவி
உன்னைச் சுற்றும் என்னைப்பற்றி உணாந்ததில்லைப் பூமி
உணர்ந்தபின்னும் அருள்வழங்க மறக்கலாமோ சாமி
கோடிமாந்தர் வந்துபோகும் வீடு இந்தப் பூமி
குருபரனே உனை நினைத்தோர் எத்தனைபேர் சாமி
ஆடிவிட்டுப் போகச் சொல்லி அடம்பிடிக்கும் பூமி
ஆட்டம் ஓய்ந்து போவதற்குள் அருள்தருவாய் சாமி
சாமி எங்கள் சாமி
சண்முகனாம் சாமி
அழகழகாய்க் கோலம்கொண்டு
ஆண்டருளும் சாமி
ஆண்டியென நின்றாலும்
அருள்வழங்கும் சாமி
ஆண்டருள வேண்டுமையா
ஆறுமுக சாமி
அடைக்கலமாய் வந்துநின்றோம்
அருள்தருவாய் சாமி
-இந்துமகேஷ்
(16.11.2004 பகல்)