வள்ளியம்மா வள்ளியம்மா
வந்தருள வேண்டுமம்மா
வள்ளல் குமரேசனுக்கோர்
வார்த்தை சொல்ல வேண்டுமம்மா!
அள்ளி அள்ளி அன்பு தந்தால்
ஆறுமுகன் வந்தருள்வான்
எண்ணி எண்ணி நான் இருந்தேன்
இன்னுமவன் அருளவில்லை
பால்பழத்தை நான் கொடுத்து
பாதத்திலே தவம் கிடந்தேன்
வேலெடுத்த திருமுகத்தான்
விழிதிறந்து பார்க்கவில்லை
கானகத்துக் குறமகள் உன்
காதலுக்காய் தான் அலைந்து
தேன்கலந்த தினைமாவைத்
தின்று பசி ஆறியவன்
ஊனகற்றி நின்ற எந்தன்
உள்ளமதை உணரானோ
ஏனருளை வழங்கவில்லை
என்றொருக்கால் கேளாயோ?
இப்பிறவி தப்பிவிட்டால்
எப்பிறவி வாய்த்திடுமோ
தப்பி இனி நான் பிறந்தால்
சண்முகனைக் காண்பேனோ
முற்பிறவி செய்தவினை
மூண்டெரிய வேண்டுமம்மா
இப்பிறவி தனில் குமரன்
எழுந்தருள வேண்டுமம்மா!
கண்விழித்துக் காத்திருந்தேன்
கந்தன் முகம் காண்பதற்கு
மண்படைத்த ஈசன்மகன்
வந்தருள மாட்டானோ
சண்முகனைக் காணுமுன்னே
சாந்திதனைக் காண்பேனோ
வண்ணமயில் வாகனனனை
வந்தருளச் சொல்லாயோ?
- இந்துமகேஷ்
27.04.2004